”இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் முத்தரப்பு போட்டியை நடத்த தயார்”… ஆஸி கிரிக்கெட் வாரியம் விருப்பம் – நடந்தா செம்மயா இருக்கும்ல!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா பாகிஸ்தான் அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்புத் தொடரை நடத்த தயாராக இருப்பதாக ஆஸி கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடக்கும் தொடர்
பாகிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடைசியாக் 1988 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி 1-0 என்ற கணக்கில் வெற்றியோடு திரும்பியது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்றதே இல்லை. அதற்குக் காரணம் 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்களின் பேருந்துகளின் மேல் பயங்கரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதே. அந்த தாக்குதலில் எந்த வீரருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும் அதன் பிறகு பெரும்பாலான நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கூட நியுசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்ல கடைசி நேரத்தில் மறுத்தது சர்ச்சைகளை உருவாக்கியது.
இந்தியா பாகிஸ்தான் போட்டியும் ரசிகர்களின் ஆர்வமும்
கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணி, பாகிஸ்தானுக்கோ அல்லது பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருநாட்டுத் தொடரில் விளையாடவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் மற்றும் எல்லைப் பிரச்சனைக் காரணமாக இரு நாட்டு அணிகளும் கலந்துகொள்ளும் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உள்ளது.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் நடந்த டி 20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட லீக் சுற்றில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதே ரசிகர்களின் ஆர்வத்துக்கு சாட்சி.
ஆஸி கிரிக்கெட் வாரியத்தின் விருப்பம்
இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லே சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் கலந்துகொள்ளும் முத்தரப்பு தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் எனக்கு பிடித்தமான தொடர்களில் ஒன்று. இரு நாடுகளும் கலந்துகொள்ளும் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இரு நாட்டைச் சேர்ந்த மக்களும் ஆஸ்திரேலியாவில் அதிகமாக வாழ்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்