‘பேட்டியில் உண்மையை உளறிய வீரர்’!.. மீண்டும் ‘பூதாகரமாக’ வெடித்த பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. விசாரணை வலையத்துக்குள் சிக்கும் ‘பெரிய’ தலைகள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது பந்தை சாண்ட் பேப்பர் (மணல் துகள்கள் கொண்ட காகிதம்) கொண்டு சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டும், இவர்கள் கூறியதன் அடிப்படையில் அந்த செயலைச் செய்த மற்றொரு வீரரான பேன்கிராஃப்டுக்கு 9 மாதங்களும், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தடை விதித்து ஆஸ்திரேலியா கிரக்கெட் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டது. தற்போது அந்த தடைக்காலம் முடிந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் சர்வதேச போட்டிகளிலும், பேன்கிரஃப்ட் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பேன்கிராஃப்ட் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியினால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பேன்கிராஃப்ட், இங்கிலாந்தில் கவுண்ட்டி அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். அப்போது பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் ஒருவர், பந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பேன்கிராஃப்ட், ‘அந்த சமயம் ஆஸ்திரேலிய அணியை எப்படியாவது வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்று நான் எண்ணினேன். அதனால் வேறு எந்த வழியும் இல்லாமல் அப்படியொரு காரியத்தை செய்துவிட்டேன். அப்போது எனக்கு விளையாட்டில் போதிய அனுபவம் இல்லை. ஒருவேளை நான் சரியாக யோசித்திருந்தால் வேறு ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பேன்’ என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நான் பந்தை சேதப்படுத்தப் போகிறேன் என்பதை அப்போட்டியில் விளையாடிய மற்ற ஆஸ்திரேலிய பவுலர்களுக்கும் தெரியும்’ என பேன்கிராஃப்ட் கூறியுள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், மீண்டும் அந்த பிரச்சனையின் மீதான விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
அந்த சமயம் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் ஆகியோரிடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது தாங்கள் மூவர் மட்டும்தான் இதில் சம்பந்தப்பட்டுள்ளோம், மற்ற வீரர்கள் யாருக்கும் இதைப்பற்றி தெரியாது என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் பேன்கிராஃப்ட் தற்போது அளித்துள்ள இந்த பேட்டியில், அப்போட்டியில் விளையாடிய அனைத்து பவுலர்களுக்கும் இந்த சம்பவம் தெரியும் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பிரச்சனை குறித்த விவரங்களை வீரர்கள் தாங்களாகவே முன்வந்து எங்களிடம் கூறிவிடுங்கள் என்றும், ஒருவேளை நாங்கள் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணர்ந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்போட்டியில் மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட், நாதன் லயன் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகிய ஆஸ்திரேலிய பவுலர்கள் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்