மறுபடியும் சிஎஸ்கே ஜெர்சியில் பார்க்க வாய்ப்பு இருக்கா..? ரசிகர்கள் எழுப்பிய கேள்வி.. உருக்கமாக ‘அஸ்வின்’ சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து அஸ்வின் அளித்த பதில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற இரண்டு புதிய அணைகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது.
அதேபோல் டெல்லி கேப்பிடல் அணி ரிஷப் பண்ட், அக்சர் படேல், பிரித்வி ஷா மற்றும் ஆன்ரிச் நோர்க்கியா ஆகிய நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது. இந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் ஆகிய இருவரையும் டெல்லி அணி தக்க வைக்கவில்லை. இவர்கள் இருவரும் சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் இவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் மீண்டும் அஸ்வின் விளையாட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘சிஎஸ்கே அணி எப்போதுமே எனது நெஞ்சுக்கு நெருக்கமானதான். சிஎஸ்கே ஒரு பள்ளி மாதிரி. அதில் நான் எல்கேஜி, யுகேஜி, ஆரம்பப் பள்ளி, பத்தாம் வகுப்பு படித்து இருக்கிறேன். அதன்பிறகு வேறு பள்ளிக்கு சென்று அங்கு உயர்கல்வி படித்தேன். அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துதான் ஆக வேண்டும். நானும் சிஎஸ்கே அணிக்கு வர விரும்புகிறேன். ஆனால் ஏலம் தான் அதனை தீர்மானிக்கும்’ என அஸ்வின் கூறினார். சிஎஸ்கே அணியை அஸ்வின் வீடு எனக் கூறியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். அதன்பிறகு புனே அணிக்காகவும், பஞ்சாப் அணியின் சார்பாகவும் விளையாடியுள்ளார். கடைசியாக டெல்லி கேப்பிடல் அணியின் சார்பாக அஸ்வின் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்