“இது ரைட்டுனா அதுவும் ரைட்டு..! என்ன நியாயம் தானே..?”- கம்பீர் ட்வீட்டுக்கு இந்திய பந்துவீச்சாளரின் 'நச்' பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த ஒரு ஷாட் குறித்து கம்பீர் ட்வீட் செய்ய அதற்கு தற்போது இந்திய அணி பந்துவீச்சாளர் அஸ்வின் தனது பாணியிலேயே விளக்கமும் கொடுத்துள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில் நேற்று இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முகமது ஹஃபீஸ் வீசய பந்தில் வார்னர் அடித்த ஒரு ‘ஷாட்’ தான் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது. முகமது ஹபீஸ் வீசிய பந்து இரண்டு முறை பிட்ச் ஆகி வர அதை விட்டுவிடாமல் இறங்கி வந்து சிக்ஸ் விளாசினார் வார்னர். இது விதிப்படி தவறு ஒன்றும் இல்லை என்றாலும் வார்னரின் செயல் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என ட்விட்டரில் விமர்சனம் செய்து இருந்தார் கவுதம் கம்பீர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் கம்பீர், ‘கிரிக்கெட் ஆட்ட உணர்வு இன்றி வார்னர் விளையாடிய காட்சி. வெட்கக்கேடானது’ எனக் குறிப்பிட்டு அந்த ட்வீட்டில் இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினின் பெயரையும் டேக் செய்திருந்தார். கம்பீரின் இந்த ட்வீட்டுக்கு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் பீட்டர் லாலோர், “தவறானது கம்பீர்” எனக் குறிப்பிட்டு அஸ்வினையும் டேக் செய்திருந்தார்.
இதற்குத்தான் தற்போது அஸ்வின் தனது பாணியிலேயே பதிலும் அளித்துள்ளார். அஸ்வினின் பதில் பதிவில், “அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், இது ரைட்டுனா, அதுவும் ரைட்டு. அது தவறுன்னா இதுவும் தவறு. நியாயம் தானே?” என அந்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளரை டேக் செய்து விளக்கம் அளித்துள்ளார்.
கம்பீர், “ஷேன் வார்னே எல்லாம் அனைத்து விதமாகவும் கமென்ட் செய்வார். எல்லாவற்றையும் ட்வீட் செய்வார். கிரிக்கெட் ஆட்ட உணர்வு குறித்து ரிக்கி பாண்டிங் பெரிய விதமாகப் பேசுவார். இதைப் பற்றி அவர்கள் என்ன சொல்வார்கள்? அஸ்வின் மன்கட் செய்த போது இவர்கள் பெரிதாகப் பேசினார்கள். இன்று வார்னர் குறித்து வார்னே என்ன சொல்லப் போகிறார்? மற்றவர்கள் குறித்துப் பேசுவது எளிதானது, நம் அணியைச் சேர்ந்தவர்கள் குறித்துப் பேசுவதுதான் கடினம” என்றும் வார்னர் விவகாரத்தில் பேசி உள்ளார்.
His point is that if this is right , that was right. If that was wrong , this is wrong too. Fair assessment? @plalor
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) November 12, 2021
மற்ற செய்திகள்