VIDEO: ‘என்னப்பா இப்படி மிஸ் பண்ணிட்ட’.. கேப்டன் மீது செம ‘கடுப்பான’ அஸ்வின்.. 2 தடவை தப்பிய வில்லியம்சன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் சாஹா களமிறங்கினர்.
இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வார்னர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரபாடாவின் ஓவரில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து சாஹாவும் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் மனிஷ் பாண்டே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது அக்சர் படேல் வீசிய ஓவரில் கேன் வில்லியம்சன் அவுட்டாக, அவரை தொடர்ந்து மனிஷ் பாண்டேவும் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய வீரர்களில் அப்துல் சமத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. டெல்லி அணியைப் பொறுத்தவரை ரபாடா 3 விக்கெட்டுகளும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.5 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களும், ஷிகர் தவான் 42 ரன்களும், ரிஷப் பந்த் 35 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீது அஸ்வின் அதிருப்தி அடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. போட்டியின் 9-வது ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட கேன் வில்லியம்சனின் பேட்டில் பந்து பட்டு பின்னால் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதை தவறவிட்டார். இதனால் அஸ்வின் சற்று கோபமடைந்தார்.
— Jabjabavas (@jabjabavas) September 22, 2021
இதனைத் தொடர்ந்து அக்சர் படேல் வீசிய 10-வது ஓவரிலும் கேன் வில்லியம்சனின் கேட்ச்சை ப்ரித்வி ஷா தவறவிட்டார். ஆனாலும் அடுத்த பந்தே ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து கேன் வில்லியம்சன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்