அதென்ன ரஹானேவை மட்டும் ‘டார்கெட்’ பண்றீங்க.. கோலி கூட தான் சொதப்பிட்டு இருக்காரு.. நேக்கா கோர்த்துவிட்ட முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னணி வீரர் ரஹானேவிற்கு ஆதரவாக ஆஷிஸ் நெக்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய புஜாரா 33 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ரஹானே, கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனால் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. இதனை அடுத்து வந்த ஹனுமா விஹாரி 20 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 17 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே 50 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், மார்க்கோ ஜான்சன் வீசிய ஓவரில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனை அடுத்து களமிறங்கிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களை (6 பவுண்டரிகள்) எடுத்தார். இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அதனால் 202 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிடில் ஆர்டரில் பொறுப்பாக ஆடவேண்டிய புஜாரா, ரஹானே சொதப்பியதே இதற்கு காரணம் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் ரஹானேவுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘விராட் கோலி கூட இதே மாதிரிதான் சொதப்பி வருகிறார். ஆனால் யாரும் அவரது ஆட்டம் குறித்து விமர்சனம் செய்யவில்லை. ஏனென்றால் அவர் அணியின் கேப்டன். புஜாரா மற்றும் ரஹானே தடுமாறி வருவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மிடில் ஆர்டரில் வீரர்களை மாற்றுவது, இதுபோன்ற பெரிய தொடர்களில் சிக்கலை ஏற்படுத்தும்’ என ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.
கேப்டன் விராட் கோலியும் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 18 ரன்களும் மட்டுமே எடுத்தார்.
அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்