“யார் பெயரையும் சொல்ல விரும்பல”.. “ஐபிஎல் போட்டியை விட்டுட்டு நாடு திரும்புங்க”.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் இலங்கை வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை விட்டுவிட்டு, நாட்டிற்காக போராட வாருங்கள் என இலங்கை வீரர்களுக்கு முன்னாள் வீரர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத்துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனால் அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை, மக்கள் அமைதி காக்க வேண்டும் என காணொளி வாயிலாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து போராட ஐபிஎல் போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்கள் சிலர், தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசவில்லை. அவர்கள் யாரென்று எனக்கு தெரியாது. அரசுக்கு எதிராக பேசுவதற்கு கிரிக்கெட் வீரர்கள் பயப்படுகிறார்கள். இவர்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள கிரிக்கெட் வாரியத்திலும் பணிபுரிவதால், தங்களது வேலையை பாதுகாத்துகொள்ளவே முயற்சிக்கின்றனர்.
ஆனால் சில இளம் கிரிக்கெட் வீரர்கள், தானாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஏதாவது தவறு நடந்தால், உங்கள் வேலையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், அதை எதிர்த்துப் பேச தைரியம் இருக்க வேண்டும். மக்கள் என்னிடம் ஏன் போராட்டத்தில் நீங்கள் பங்குகொள்வது இல்லை என்று கேட்கிறார்கள். நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போராட்டங்களில் ஈடுபடவில்லை. அதனால்தான் நானும் போராட்டங்களில் பங்கேற்கவில்லை.
ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அந்த வீரர்கள் ஒரு வாரத்திற்கு, ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்