"அப்பா மாதிரியே புள்ளையும்".. 15 வயசுல சச்சின் செஞ்ச அதே சாதனை.. முதல் போட்டியில் பட்டையை கிளப்பிய அர்ஜுன் டெண்டுல்கர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி வென்றிருந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி உள்ளது.
மறுபக்கம், தற்போது இந்தியாவில் வைத்து ரஞ்சி டிராபி தொடரும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலம் சார்பாக வீரர்கள் களமிறங்கும் நிலையில், இதில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு சர்வதேச அணியில் இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
அப்படி ஒரு சூழலில், அனைவரது பார்வையும் ரஞ்சி டிராபி தொடர் மீதும் இருக்கும். இந்த நிலையில், தனது தந்தையை போல ரஞ்சி டிராபி தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் படைத்துள்ள சாதனை, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறந்து, பல ஜாம்பவான்களையும் மிரள வைத்தவர் ஆவார். சச்சின் படைத்துள்ள சாதனைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்ற சூழலில், அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராக தான் இருந்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர், உள்ளூர் தொடர்களில் ஆடி வருகிறார். அப்படி ஒரு சூழலில், தற்போது ஆரம்பமாகி உள்ள ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காக ஆடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். இதில் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக, கோவா அணி மோதி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவா அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்துள்ளது. இதில் களமிறங்கி இருந்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு இது முதல் ரஞ்சி போட்டியாகும். 120 ரன்கள் எடுத்து அவுட்டான அர்ஜுன், அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்து அசத்தி உள்ளார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு, 15 வயதில் ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை புரிந்திருந்தார். சச்சினை போலவே, அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கரும் முதல் ரஞ்சி போட்டியில் சதமடித்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்