கே.எல்.ராகுலை தக்க வைக்காததுக்கு காரணம் என்ன..? ஒரு வழியாக மவுனம் கலைத்த பஞ்சாப் கிங்ஸ் கோச்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகே.எல்.ராகுல் அணியில் தக்கவைக்காததற்கான காரணம் குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மயங்க் அகர்வால் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகிய 2 வீரர்கள் மட்டுமே தக்கவைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை விடுவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், ‘கடந்த நான்கு ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் ஆணிவேராக கே.எல்.ராகுல் இருந்துள்ளார். நான் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் கே.எல்.ராகுல் தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கே.எல்.ராகுலை தக்க வைத்து அவர் தலைமையில்தான் அணியை தொடர வேண்டும் என்றே பஞ்சாப் அணியை நோக்கமாக இருந்தது.
ஆனால் மீண்டும் ஏலத்துக்கு செல்ல வேண்டுமென்று கே.எல்.ராகுல் தான் முடிவு செய்தார். ஐபிஎல் விதிகளின்படி ஏலத்துக்கு முன் தாங்கள் விளையாடிய அணியில் தக்க வைக்க வேண்டுமா அல்லது மீண்டும் ஏலத்திற்கு செல்ல வேண்டுமா என்று வீரர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அதனால் அவருடைய முடிவுக்கு நாங்கள் மதிப்பளித்துள்ளோம். அதனால் கே.எல்.ராகுல் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்’ அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் கே.எல்.ராகுலை அணுகியதாக தகவல் வெளியானது. அதனால் பஞ்சாப் அணி இதுகுறித்து பிசிசிஐ இடம் புகார் அளித்ததாக சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்