என்னங்க இப்டி சொல்லிட்டீங்க..! ‘இவர்’ கேப்டனா இருக்கலாமா? வேணாமா?- என்ன சொல்ல வர்றார் ஆகாஷ் சோப்ரா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிராக அடுத்து இந்திய அணி விளையாட இருக்கும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியை ரஹானேவுக்குக் கொடுத்து இருப்பதை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய டெஸ்ட் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் சோப்ரா.
டி20 இந்திய அணியின் கேப்டன் ஆகப் புதிதாக ரோகித் சர்மா பொறுப்பு ஏற்றுள்ளார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டன் ஆக விராட் கோலியே நீடிப்பார். இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி உடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் முதலில் நடக்கும் போட்டி கான்பூரிலும் இரண்டாம் போட்டி மும்பையிலும் நடைபெற உள்ளது. முதலில் நடக்கும் கான்பூர் போட்டியில் கோலி பங்கேற்கவில்லை. மும்பையில் நடக்கும் இரண்டாவது போட்டியில் இருந்துதான் கோலி அணியில் இணைந்து கொள்கிறார்.
இந்த சூழலில் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் அஜிங்கியா ரஹானே கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆக கடந்த சில ஆண்டுகளாக ரஹானே பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதிய டெஸ்ட் தொடரில் ரஹானே தலலிமையிலான இந்திய அணி தான் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
ஆனாலும், ரஹானேவை டெஸ்ட் கேப்டன் ஆக நியமித்து இருப்பதை கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் சோப்ரா. சோப்ரா கூறுகையில், “டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் ஆக அஜிங்கியா ரஹானேவை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். ஆனால், முன்னர் ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணியில் இவரைத் தேர்ந்தெடுக்கலாமா என்பதே பெரிய கேள்வி ஆக இருந்தது என்பதுதான் உண்மை.
அஜிங்கியா ரஹானேவை எனக்குப் பிடிக்கும் என்றாலும் அவரது சராசரி புள்ளி விவரம் வீழ்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அவரது சராசரி 20 புள்ளிகள் குறைந்து உள்ளது. இந்த மாதிரி ரஹானேவின் சராசரி இவ்வளவு வீழ்ந்ததே இல்லை. லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் இன்னிங்ஸில் புஜாரா உடனான கூட்டணியில் ரஹானே அரை சதம் அடிக்கவில்லை என்றால் ரஹானேவுக்கு மாற்று வீரர் ஆக யாரை அணியில் களம் இறக்கலாம் என்ற விவதாதம் எழுந்திருக்கும். இந்த நேரம் ரோகித் சர்மா துணை கேப்டன் ஆக இருந்திருந்தால் ரஹானேவுக்கானது கேள்விக்குறிதான். ஆனால், இந்த நிமிடம் ரஹானே தான் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீரிஸ் ரஹானேவுக்கு மிகவும் முக்கியமானது. அந்த ஆட்டத்தில் அவர் அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட வேண்டும் அதே சமயம் தனக்காக ரன்கள் குவிக்க வேண்டும். ரஹானேவுக்கு இது அழுத்தம்தான். கடந்த ஒரு ஆண்டும் ரஹானேவுக்கு சுமார் ஆகத்தான் அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்