டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி அவுட்டாவது இதுதான் முதல்முறை.. என்னதான் ஆச்சு ரஹானேவுக்கு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே மோசமான சாதனையை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும், மார்க்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரஹானே மோசமான சாதனையை படைத்துள்ளார். 49 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய ரஹானே அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பந்திலேயே ரஹானே அவுட்டாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்