'ரோகித் சர்மா விஷயத்தில்’... ‘வருத்தம் தெரிவித்த விராட் கோலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து’... ‘விளக்கம் அளித்த பிசிசிஐ’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோகித் சர்மாவின் காயம் குறித்த விஷயத்தில் சரியான தெளிவு இல்லை என்று கேப்டன் விராத் கோலி வருத்தம் தெரிவித்ததற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆடியபோது ஏற்பட்ட தசை நார் காயம் காரணமாக, ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில், ரோகித் சர்மா பங்கேற்க முடியாது எனக் கூறப்பட்டது. பின்பு, டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் முழு உடற்தகுதி எட்டாததால், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவால் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இன்று சிட்னி நகரில் முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ‘ரோகித் சர்மா விஷயத்தில் சரியான தெளிவில்லை. அவர் ஏன் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா வரவில்லை என்பதே சரியாகத் தெரியவில்லை’ என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
மேலும், ‘காயம் இருந்தாலும் இந்திய அணியுடனே துபாயில் இருந்து வந்திருந்தால் ஆஸ்திரேலியாவிலேயே காயத்துக்கான சிகிச்சையை மேற்கொண்டு டெஸ்ட் தொடருக்கு அவர் தயாராகியிருக்கலாம்’ என்றும் விராட் கோலி கூறியிருந்தார்.
தற்போது ரோகித் சர்மா ஏன் ஆஸ்திரேலியா நேரடியாக செல்லவில்லை என்பதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. "தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப் பார்க்க, ரோகித் சர்மா மீண்டும் மும்பை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது சர்மாவின் தந்தை தேறி வருகிறார்.
தற்போது ரோகித் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து, தன் காயத்துக்கான சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. ரோகித் சர்மாவுக்கு டிசம்பர் 11 ஆம் தேதி உடற் தகுதி ஆய்வு செய்யப்பட்டும். இதன் பிறகு அவரது பங்கேற்பு குறித்த தெளிவு கிடைக்கும். ஆனால் விராட் கோலி சொன்னது போல, இந்த விஷயத்தில் நிலவிய குழப்பத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம்" என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
ரோகித் சர்மா உடற் தகுதி பெற்றாலும், கொரோனா விதிமுறைகளால் 14 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும். எனவே, அவரால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது. ஆனால், இந்தத் தனிமைக் காலத்தில் ரோகித் சர்மா பயிற்சி பெற விதிகளைச் சற்று தளர்த்த வேண்டும் என்று, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாலியீடம் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் காயம் காரணமாக இஷாந்த் சர்மா முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட மாட்டார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு விட்டாலும், அவரால் உரிய நேரத்தில் உடற் தகுதி பெற முடியாது என்கிற காரணத்தால், டெஸ்ட் தொடரில் எந்த ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்