ஸ்கெட்ச் போட்டு தூக்கும் இங்கிலாந்து!.. ராபின்சனை தொடர்ந்து... இனவெறி விவகாரத்தில் சிக்கிய மற்றொரு வீரர்!.. விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலே ராபின்சனை தொடர்ந்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் இனவெறியை தூண்டிய புகாரில் சிக்கியுள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஒலே ராபின்சன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினார். அதே போல பேட்டிங்கில் 42 ரன்களும் அடித்திருந்தார்.
முதல் போட்டியிலேயே இப்படி ஒரு அசத்தல் ஆட்டமா என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால், அந்த போட்டி முடியும் வரை கூட பெருமை நீடிக்கவில்லை. அவரைப் பாராட்டிய அதே ரசிகர்கள், ராபின்சனை மிக மோசமாக விமர்சித்தனர். இதற்கு காரணம் அவர் போட்ட ட்வீட்கள் தான்.
8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில கொச்சையான வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ராபின்சன் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
ஆனால், ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், அவரது இந்த ட்வீட்கள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. அதன்படி அவரது மன்னிப்பை நிராகரித்து, அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ராபின்சன சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் இனவெறி பிரச்சினையில் சிக்கியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கும் முன்பு சமூக வலைதளங்களில் இனவெறியை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வீரர் குறித்த எந்த தகவலையும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம், அந்த பதிவுகளை போடும் போது அந்த வீரர் 16 வயது கூட நிரம்பாதவர் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள தகவலில், மற்றொரு இங்கிலாந்து வீரர், இணையத்தில் தவறான கருத்துகளை பதிவு செய்திருந்தது தெரியவந்துள்ளது. நாங்கள் உடனடியாக அது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்