‘இப்படியே கேள்வி கேட்டா எந்திரிச்சு போய்டுவேன்..’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆவேசப்பட்ட கேப்டன்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ள ஆஃப்கானிஸ்தான் உலகக் கோப்பையில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.
இங்கிலாந்து உடனான போட்டி முடிந்த பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நயீப் பேசிய விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மோர்கன் அதிரடியால் 397 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் 17 சிக்ஸர்கள் விளாசிய மோர்கன் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில் போட்டிக்கு முந்தைய நாள் மான்செஸ்டர் ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் பொது மக்கள் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வீரர்களை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது இது நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. போலீஸ் தரப்பில், “இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நயிப்பிடம் மான்செஸ்டர் உணவகம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயீப், “அந்தச் சம்பவம் குறித்தும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தமக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி தெரிய வேண்டுமானால் அணியின் மேலாளர் அல்லது பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” எனக் கூறினார். செய்தியாளர்கள் மேலும் அதுகுறித்தே கேள்வி கேட்க, “தொடர்ந்து இதுபற்றியே கேள்வி கேட்டால் நான் எழுந்து சென்றுவிடுவேன்” என நயீப் ஆவேசமாக பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.