‘வார்னரை பத்தி எப்படி இந்த மாதிரி எழுதுனாங்கன்னு தெரியல’!.. விமர்னங்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் கொடுத்த பதிலடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தது குறித்து அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை (T20 World Cup)தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு (David Warner) தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கேப்டனாக டேவிட் வார்னர் வழி நடத்தினார். இவர் தலைமையிலான ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளை சந்திந்தது. அதனால் தொடரின் பாதியிலேயே டேவிட் வார்னரை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கிவிட்டு, நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் வார்னர் சொதப்பவே, அடுத்தடுத்த போட்டிகளில் ப்ளேயிங் லெவனிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இந்த சூழலில் தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவும், வார்னர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது டி20 உலகக்கோப்பை அணியில் வார்னர் எப்படி இடம்பிடித்தார்? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ‘சில மாதங்களுக்கு முன்பு பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் பேசினேன். அப்போது, வார்னரை பற்றி கவலைப்படாதீர்கள், அவர்தான் தொடர் நாயகனாக இருக்கப் போகிறார் என்று கூறினேன்.
இனி வார்னர் அவ்வளவுதான், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியப்போகிறது என எப்படி விமர்சகர்கள் எழுதினார்கள் என்று தெரியவில்லை. எல்லா நேரங்களிலும் வார்னர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஒரு போராளி’ என ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்