"உங்க ராஜ தந்திரங்கள் எல்லாம் இப்டி தான் இருக்குமா 'கேப்டன்'??.. இப்டி தான் 'கேப்டன்சி' பண்ணுவீங்களா??.. விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

"உங்க ராஜ தந்திரங்கள் எல்லாம் இப்டி தான் இருக்குமா 'கேப்டன்'??.. இப்டி தான் 'கேப்டன்சி' பண்ணுவீங்களா??.. விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'!

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அது மட்டுமில்லாமல், நேற்றைய போட்டியில், இயான் மோர்கனின் கேப்டன்சியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, இரண்டாவது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி (Varun Chakravarthy), கோலி மற்றும் ரஜத் படிதார் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால், மேக்ஸ்வெல் (Maxwell) களமிறங்கிய பிறகு, பவர் பிளேயில் வருணை பந்து வீச மோர்கன் (Morgan) அழைக்கவில்லை. ஒரே ஓவரில், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய வருணிற்கு தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு கொடுக்காமல், வேறு பந்து வீச்சாளர்களை மோர்கன் பயன்படுத்தினார்.

மோர்கனின் இந்த முடிவை, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவும் (Aakash Chopra), மோர்கனின் கேப்டன்சி குறித்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

'சிறந்த ஃபார்மில் இருக்கும் மேக்ஸ்வெல் ஆட வரும் போது, இரண்டு விக்கெட்டுகளை எடுத்த வருணை பந்து வீசச் செய்து மேக்ஸ்வெல்லை அவுட் எடுக்க முயற்சி செய்யாமல், வேறு பந்து வீச்சாளரை பந்து வீசச் செய்தார் மோர்கன். அது மட்டுமில்லாமல், வேறு ஒரு முடிவையும் 19 ஆவது ஓவரில் மோர்கன் எடுத்தது தான், இன்னும் ஆச்சரியமாக உள்ளது.

டிவில்லியர்ஸ், கைலி ஜேமிசன் என இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் போது, 19 ஆவது ஓவரை ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை மோர்கன் பந்து வீச செய்தார். மோர்கனின் இந்த முடிவு, தவறான ஒன்றாகவே நான் கருதுகிறேன். இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசனுக்கு அந்த ஓவரை வழங்கியிருக்கலாம். அதே போல, 200 ரன்களுக்கு அதிகமான கடின இலக்கை நோக்கி ஆடும் போது, ரசல் போன்ற அதிரடி வீரரை சற்று முன்பாகவே களமிறக்கி, அவரை நிறைய பந்துகள் சந்திக்க வைத்திருக்கலாம்.

ஆனால், அதனையும் மோர்கன் மேற்கொள்ளவில்லை. "மோர்கனின் இடத்தில் தற்போது ஒரு இந்திய கேப்டன் இருந்திருந்தால், இந்திய ஊடகங்கள் நிச்சயம் அவரை தற்போது கிழித்து தொங்க விட்டிருக்கும். ஆனால், வெளிநாட்டு கேப்டன் என்பதால் யாரும் தற்போது ஒன்றும் சொல்லவில்லை" என கம்பீர் கூறியிருந்தார்.

ஆனால், அதனை எல்லாம் பார்க்காமல், நிச்சயம் மோர்கனின் கேப்டன்சி பற்றி அதிகம் விவாதிக்க வேண்டும். ஏனென்றால், அவ்வளவு சாதாரணமாக தான், கொல்கத்தா அணியை மோர்கன் வழி நடத்தினார்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்