'அன்று உலகக்கோப்பை ஜெயித்த அணியில் இருந்தார்'... 'இன்று கையில் இருப்பதோ கூலி வேலை'... இந்திய வீரரின் பரிதாப நிலை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த வீரரின் நிலை பலரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2018ல் நடந்த பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி தான். அந்த தொடரில் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டி சென்றது.
அந்த போட்டியில் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இந்திய அணியில் இடம் பெற்றவர் நரேஷ் தும்டா. இவர் குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காகப் பல முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நவ்சாரி பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்தும், சில நேரங்களில் கட்டிட வேலைக்குச் சென்றும் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
அடுத்த உலகக்கோப்பை போட்டிக்குத் தயாராக முடியாமலும், பயிற்சி எடுக்க முடியாமலும் அவர் தவித்து வருகிறார். இவருக்கு அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தினமும் 250 ரூபாய் கூலிக்கு வேலைக்குச் செல்லும் நரேஷ் தும்டா, அவருக்கு வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
அரசு தனக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ள அவர், அரசின் உதவி கிடைத்தால் மட்டுமே மறுபடியும் கிரிக்கெட் குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என வேதனையுடன் கூறியுள்ளார். ஒரு பக்கம் கிரிக்கெட் வீரர்களுக்குக் கோடிகளில் சம்பளம் கொட்டும் நிலையில், மறுபக்கம் இது போன்ற வீரர்கள் தங்களின் தினசரி வாழ்க்கையையே நடத்தவே கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பது தான் சோகமான உண்மை.
மற்ற செய்திகள்