"யாருப்பா, அந்த '16 வயசு' பையன்?... சும்மா பட்டைய கெளப்புறான்..." மும்பை அணி குறி வைக்கும் 'இளம்' வீரர்... வெளியாகியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் வைத்து நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, எட்டு ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதையும், வெளியேற்றிய வீரர்களின் பட்டியலையும் சில தினங்களுக்கு முன் சமர்ப்பித்திருந்தது. 8 அணிகளும் வெளியேற்றிய வீரர்கள் மட்டுமில்லாமல், புதிதாகவும் சில வீரர்களை சேர்த்து இந்த முறை ஏலம் நிகழத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16 வயதேயான இளம் வீரர் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி அணியில் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில், தற்போது சையது முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வரும் நிலையில், இதில் நாகலாந்து அணியில் இடம்பெற்றிருந்த க்ரிவிட்சோ கென்சே (Khrievitso Kense) என்ற இளம் வீரரைத் தான் மும்பை அணி இலக்காக வைத்துள்ளது.
சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில், நான்கு ஆட்டங்களில் பங்கேற்ற கென்சே, தனது சுழற்பந்து வீச்சு திறமையால் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிக ரன்களையும் விட்டுக் கொடுக்காமல், தான் அறிமுகமான முதல் தொடரிலேயே சிறப்பாக அவர் பந்து வீசுவதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமையாளர் ஒருவர் அவரை அணுகியதாக தெரிகிறது. அப்படி அவரது பெயர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைத்தால் நாகலாந்து கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய விஷயமாக அது பார்க்கப்படும்.
அதே போல, வடகிழக்கு அணிகளில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையும் கென்சேவுக்கு கிடைக்கும். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, சுழற்பந்து வீச்சாளர்கள் சிலரை அணியில் இணைக்க முயற்சிகள் செய்து வரும் நிலையில், கென்சேவை மும்பை அணி குறி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்