குடும்ப கஷ்டத்தால் பஞ்சர் கடை நடத்தியவர்.. இன்று IAS.. கல்வியால் வறுமையை வீழ்த்திய வருண் பரண்வால்..!
முகப்பு > செய்திகள் > கதைகள்கல்வி இருந்தால் வாழ்வில் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு சான்றாக திகழ்கிறார் ஐஏஎஸ் ஆபீஸரான வருண் பரண்வால்.
வாழ்க்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டு, பின்னர் தனது கடின முயற்சியாலும் கல்வியாலும் முன்னேறி சாதனை படைத்த பலரும் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தான் வருண் பரண்வால். குடும்ப சூழ்நிலையை கருதி பஞ்சர் கடை நடத்திவந்த வருண், தனது விடா முயற்சியின் பலனாக ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார். இளைஞர்கள் பலரும் இவரை தங்களுடைய ரோல் மாடலாக கருதுகின்றனர்.
பஞ்சர் கடை
வருண் பரன்வால் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சரில் பிறந்தவர். அங்கு அவரது தந்தை சைக்கிள் கடை ஒன்றினை நடத்திவந்தார். சிறுவயது முதலே மருத்துவர் ஆகவேண்டும் என ஆசைகொண்டிருந்த வருண், நன்றாக படிக்கக் கூடியவர். துரதிருஷ்ட வசமாக வருண் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இதனால் அவரது டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவு தகர்ந்துபோனது. அதேவேளையில், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்திருக்கிறது.
இதனால் படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் பஞ்சர் கடையை எடுத்து நடத்தியிருக்கிறார் வருண். ஒருநாள் வருணின் தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வருணை சந்தித்திருக்கிறார். குடும்ப கஷ்டம் காரணமாக படிப்பை தொடரமுடியவைல்லை என வருண் சொன்னதை கேட்ட அந்த மருத்துவர் உடனடியாக அவரது கல்விக்கு உதவ முடிவெடுத்திருக்கிறார். இதன் காரணமாக மீண்டும் பள்ளிக்குச் சென்ற வருண் மாவட்டத்திலேயே இரண்டாவது மாணவராக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
மீண்டும் கல்வி
இதனிடையே அவருடைய அம்மா, சைக்கிள் கடையை நிர்வகித்து வந்திருக்கிறார். பகலில் பள்ளிக்கு செல்லும் வருண், இரவில் சைக்கிள் கடையில் வேலையும் பார்த்திருக்கிறார். பள்ளியை முடித்த வருண் எம்ஐடி புனேயில் சேர்ந்து பொறியியல் பயின்றிருக்கிறார். அப்போதும் தனது சைக்கிள் கடையில் வேலைபார்த்துக்கொண்டே படித்த இவர், கோல்ட் மெடலுடன் பொறியியலை முடித்திருக்கிறார்.
இவருடைய கல்வி தகுதியை அறிந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்று இவரை பணியில் அமர்த்த முடிவு செய்திருக்கிறது. அதுவும் கடைசி ஆண்டு கல்லூரி முடிக்கும் முன்பே இவருக்கு வேலை கிடைத்திருக்கிறது. இருப்பினும், தன்னைப்போல கஷ்டப்படும் மக்களுக்கு உதவ நினைத்த வருண், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி பெற துவங்கினார். அண்ணா ஹசாரேயின் போராட்டங்களினால் உத்வேகம் பெற்ற வருண், தனது வாழ்க்கை முழுவதும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட துவங்கினார்.
ரோல் மாடல்
இதனிடையே, யுபிஎஸ்சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று, அனைவரையும் திகைக்க வைத்தார் வருண். தற்போது மாவட்ட ஆட்சியாளராக பணிபுரியும் வருண், தன்னுடைய இந்த வெற்றிக்கு முதல் காரணம் தனது தாய் தான் என பலமுறை தெரிவித்திருக்கிறார். வறுமையினால் பஞ்சர் கடையில் வேலைபார்த்துவந்த வருண், தன்னுடைய விடா முயற்சியின் பலனாக ஐஏஎஸ் அதிகாரியானது அவ்வட்டார மக்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் பகுதி இளைஞர்கள் வருணை தங்களது மாடலாக கருதுகின்றனர்.
மற்ற செய்திகள்