தெருவோரக் குழந்தைகளுக்காக முதல்முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் சவுத் இந்தியா அணி கோப்பையை வென்றுள்ளது.
லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை மற்றும் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் சவுத் இந்தியா அணியாக கலந்து கொண்டனர். 8 அணிகள் பங்கேற்ற இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் சவுத் இந்தியாவும் மோதின. இதில் சென்னையிலிருந்து நாகலட்சுமி (17), சூர்யபிரகாஷ் (17), பால்ராஜ் (17) , மோனிஷா (14) ஆகிய 4 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கருணாலயா என்கிற தனியார் தொண்டு நிறுவனம் இவர்களுக்கான உதவிகளைச் செய்து இதை சாத்தியமாக்கி இருக்கிறது. இது தெருவோரக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக இயங்கும் அமைப்பாகும். தெருவோரத்தில் வசிப்பதிலுள்ள சிரமங்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் பற்றிக் கூறும் மோனிஷா தெருவோரக் குழந்தைகள் சார்பில் பேசும்போது, “எங்களை மதித்து நாங்கள் சொல்வதைக் கேட்டாலே எங்களை பாதுகாக்க முடியும், தயவுசெய்து எங்களைப் பாதுகாக்க உதவுங்கள்” எனக் கூறியுள்ளார்.
லண்டனில் சாதித்து சொந்த ஊர் திரும்பிய இவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.