‘சாலையோரத்தில்’... ‘உணவு விற்கும் எம்பிஏ இளம் தம்பதி'... 'மனதை உருக வைக்கும் காரணம்’... வைரலான பதிவு!
முகப்பு > செய்திகள் > கதைகள்தனது வீட்டில் பணிபுரியும் முதிய பெண்மணிக்கு உதவும் வகையில், இளம் தம்பதி செய்துவரும் வேலை மனதை உருக வைத்துள்ளது.
கடந்த 2-ம் தேதி புதன்கிழமை, காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தையொட்டி மும்பையில் பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன. இதனால், தீபாலி பாட்டியா என்றப் பெண் நல்ல உணவைத் தேடி காலைநேரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில், கண்டிவாலி ரயில் நிலையம் வெளியே, இளம் தம்பதி நடத்திவந்த சாலையோர சிற்றுண்டி கடை தென்பட்டது. அங்கு சென்ற தீபாலி பாட்டியா, போகோ, உப்புமா, பரத்தாஸ், இட்லி உள்ளிட்ட உணவுகளை ருசிபார்த்தார். பின்னர், அந்த இளம் தம்பதியிடம், சாலையில் ஏன் சிற்றுண்டி கடை நடத்துகிறீர்கள் என்று தீபாலி பாட்டியா கேட்டுள்ளார்.
தம்பதியின் காரணத்தைக் கேட்டு திகைத்த அவர், இளம் தம்பதியின் செயலால் உருகிப் போனார். தற்போது அந்த இளம் தம்பதியின் போட்டோவுடன், சமூக வலைத்தளத்தில் தீபாலி பாட்டியா பதிவிட்ட பதிவு ஹிட்டடித்துள்ளது. அதில், சிற்றுண்டி கடையை நடத்திக்கொண்டிருப்பது இளம் தம்பதியான அஷ்வினி ஷெனாய் ஷா மற்றும் அவரது கணவர். எம்பிஏ பட்டதாரிகளான இவர்கள் இருவரும், தங்களது வீட்டு வேலையை செய்துவரும் 55 வயதான முதியப் பெண்மணிக்கான அந்தக் கடையை, காலை 4 மணி முதல் 10 மணி வரை நடத்தி வருகின்றனர்.
முதியப் பெண்மணியின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த முதியப் பெண்மணியின் பொருளாதார சுமையை குறைக்க, அவர் செய்து தரும் உணவுகளை, அந்த பெண்மணிக்கு பதிலாக இவர்கள் விற்று தருகின்றனர். பின்னர் 10 மணிக்கு மேல் அவர்களது வேலைக்கு சென்று விடுகின்றனர். சூப்பர் ஹீரோ என்று பராட்டி பதிவிட்ட இந்தப் பதிவு வைரலானதையடுத்து, அந்த இளம் தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.