'இயற்பியல் ஆசிரியர் இல்லாத பள்ளி'.. ஆட்சியரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

5 வருடமாக இயற்பியல் ஆசிரியர் இல்லாத அரசுப்பள்ளி ஒன்றுக்கு ஆட்சியரின் மனைவியே ஆசியராகக் களமிறங்கி வகுப்பெடுத்து வரும் சிறப்பான விஷயம் பாராட்டைப் பெற்று வருகிறது.

'இயற்பியல் ஆசிரியர் இல்லாத பள்ளி'.. ஆட்சியரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு!

அருணாச்சலப்பிரதேசத்தின் அப்பர் சபன்சிரி மாவட்டத்துக்கு ஆட்சியராகவும் நீதித்துறை நடுவராகவும் கடந்த 2016-ஆம் வருடம் பொறுப்பேற்றவர் டேனியல் அஷ்ராப். இவரது மனைவியும் பொறியியல் பட்டதாரியுமான ருகியும், தன் கணவர் டேனியலுடனேயே வந்து தங்கி, சிறப்பான ஹோம் மேக்கராக இருந்து வந்தார்.

இணையவசதி தொடங்கி பல அடிப்படை வசதிகளே எளிதில் கிட்டாத அம்மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 வருடமாக இயற்பியல் ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அம்மாணவர்கள் ஆட்சியர் டேனியலிடம் புகார் அளித்துள்ளனர். அப்படியே ஆசிரியர்கள் நியமனம் செய்தாலும், மிகவும் பின் தங்கிய, அடிப்படை வசதிகள் அற்ற ஏரியா என்பதால் யாரும் அங்கு ஆசிரியராக வேலைபார்க்க முன்வராததாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான், ஆட்சியர் டேனியலின் மனைவி ருகி, நேரடியாகக் களமிறங்கி மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கத் தொடங்கியுள்ளார். இதனால் கடந்த வருடம் 17 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற இதே பள்ளியில், இந்த வருடம் 92 மாணவர்களில் 74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யூ-டியூப் வீடியோக்களை டெல்லிக்குச் சென்று கலெக்ட் செய்துகொண்டு மாணவர்களுக்கு போட்டுக் காண்பித்தும், வாட்ஸ்-ஆப் குழுமம் தொடங்கி, சந்தேகங்களைத்தீர்த்தும் ஆசிரியராக இயங்கி வரும் ருகி, தனக்கு இதனால் பெரும் தன்னம்பிக்கை கிடைப்பதாகவும், ஒவ்வொரு ஹோம் மேக்கரும் இப்படியான சமூகப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

SCHOOL, TEACHER