'இரவில் வாட்ச்மேன் வேலை'... 'மழை வந்தா ஒழுகுற வீடு'... 'என்னால முடியலன்னு பின்வாங்க தோணுதா'?... 'அப்போ இந்த 28 வயது ரஞ்சித்தை நினைத்து பாருங்க'... மெய்சிலிர்க்க வைக்கும் சக்ஸஸ் ஸ்டோரி!
முகப்பு > செய்திகள் > கதைகள்வாழ்க்கையில் இதற்கு மேல் என்னால் ஓட முடியாது, எனச் சோர்ந்து பின்வாங்க நினைப்பவர்களுக்கு நிச்சயம் ரஞ்சித்தின் வாழ்க்கை பாடம் ஒரு உத்வேகத்தை அளிக்கும்.
கடந்த சில நாட்களாக நெட்டிசன்கள் கொண்டாடும் ஒரே பெயர் ரஞ்சித் ராமச்சந்திரன். அதற்குக் காரணம், அவர் இணையத்தில் பகிர்ந்த அவரது வாழ்க்கைக் கதை. அந்த கதை, கனவு காணும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஓர் உத்வேகம் கொடுக்கும். வலியையும், கஷ்டங்களையும் சந்திக்காமல் நிச்சயம் வெற்றியை அடைய முடியாது என நிரூபித்து இருக்கிறார் ரஞ்சித்.
ஒழுகும் ஓட்டை வீட்டில் வசித்தபடி, இரவுநேர செக்யூரிட்டி பணி செய்துகொண்டே பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, ஐ.ஐ.எம் - ராஞ்சியில் உதவிப் பேராசிரியராகப் பாடம் சொல்லித் தரும் ஒரு 28 வயது இளைஞரின் சாதனை பயணம் தான் பலருக்கும் எனர்ஜி டானிக். ரஞ்சித்தின் சொந்த ஊர் கேரள மாநிலம் காசர்கோடு அருகில் உள்ள மலைப்பகுதி. தந்தை ராமச்சந்திரன் நாயக் தைய தொழிலாளி. தாய் பேபி கூலித் தொழிலாளி.
இந்த தம்பதியினரின் அதிகபட்ச படிப்பே 5-ம் வகுப்புதான். ஆனால் மகன் ரஞ்சித்தைப் படிக்க வைத்து விட வேண்டும் என்பது தான் அவர்களின் தலைமுறை கனவு. 10-ம் வகுப்பு வரை, காசர்கோடு வெல்லாச்சல் பகுதியில் உள்ள பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்காக அரசு நடத்தும் மாதிரி குடியிருப்புப் பள்ளியில் சேர்த்துப் படித்த ரஞ்சித், பள்ளிப்படிப்பை நல்ல மதிப்பெண்கள் உடன் முடித்து கல்லூரிக்குச் செல்ல தயாராக இருந்தார்.
ஆனால், குடும்பத்தின் நிதிச்சுமை காரணமாகக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் கல்லூரி படிப்பை நிறுத்தி விடலாம் என முடிவு செய்த நேரத்தில், பனத்தூரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இரவுநேர வாட்ச்மேன் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். ரஞ்சித்துக்கு அந்த வேலை கிடைத்து விட பணியில் இணைத்துக்கொண்டு காலையில் கல்லூரி, இரவில் வேலை என தனது ஓட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் வேலைக்குச் சேரும்போது ரஞ்சித்துக்கு கிடைத்த சம்பளம் மாதத்திற்கு ரூ.3,500. அதுவே ஐந்தாம் ஆண்டில் மாதத்திற்கு ரூ.8,000 ஆக உயர்ந்தது. 5 ஆண்டுகள் வாட்ச்மேன் வேலையைப் பார்த்துக்கொண்டே இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை முடித்தார் ரஞ்சித். இரண்டு பட்டப் படிப்புகள் படித்த கல்லூரியும் வாழ்க்கையின் படிப்பினையை உணர்த்தியது.
இதனிடையே இளநிலைப் படிப்பு படித்த செயின்ட் பியஸ் எக்ஸ் கல்லூரி அவருக்கு மேடைகளில் எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தது என்றால், காசர்கோடு பகுதியைத் தாண்டியும் உலகமும், வாழ்க்கையும் இருக்கிறது என்று உணர்த்தியது, ரஞ்சித் முதுநிலை படிப்பு படித்த சென்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் கேரளா. இங்குக் கிடைத்த வாழ்க்கை மற்றும் கல்வி அனுபவங்களால் ஐஐடி மெட்ராஸ் என்ற வேறு ஒரு உலகத்தை அடைந்தார் ரஞ்சித்.
ரஞ்சித் சென்னைக்கு வரும் முன்பு, அவருக்கு மலையாளத்தில் மட்டுமே பேசத் தெரியும். அதனால் ஐஐடியில் சேர்ந்தபோது அவர் பேசக்கூடப் பயந்துள்ளார். இனி என்னால் இங்கு இருக்க முடியாது என எண்ணி என் பிஎச்டியை கைவிட முடிவு செய்தபோது அவருக்கு வழிகாட்டி டாக்டர் சுபாஷ் சசிதரன் மீண்டும் ஒரு வாழ்க்கைப் பாடத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார். ஒருநாள் மதிய உணவிற்கு ரஞ்சித்தை வெளியே அழைத்துச் சென்ற அவர், தோல்வியை ஒப்புக்கொள்வதைவிட அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று உணர்த்தினார்.
அவர் கொடுத்த உத்வேகம் மீண்டும் ஒருமுறை வாழ்க்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்துக்கு ரஞ்சித்தை வர வழிவகுத்தது. அந்தத் தருணத்திலிருந்து அவர் வெற்றிபெற வேண்டும் என ரஞ்சித் முடிவெடுத்தார். பேராசிரியர் சுபாஷ் சாரின் மாணவர்கள் பலரும், பெரிய கம்பெனிகளில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களைப் போன்று நானும் உயர்ந்த இடங்களுக்குச் செல்ல சிக்கல்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் விதைத்துக் கொண்டார் ரஞ்சித்.
அதன் விளைவு, நான்கு ஆண்டுகளில் அவரது பிஎச்டியை முடித்தார் ரஞ்சித். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம், ஐ.ஐ.எம்-ராஞ்சியில் உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தார். அதேநேரத்தில் அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு ஒரு வீடு கட்ட கடன் வாங்க வங்கிகளில் விண்ணப்பித்துள்ளார். இந்தக் கடன் கிடைக்கும் முன்பே அவருக்கு ஐ.ஐ.எம் - ராஞ்சியில் உதவிப் பேராசிரியர் பணி கிடைத்தது.
பனத்தூர் மலைப்பகுதியில் தொடங்கிய ரஞ்சித்தின் இந்த பயணம், இதோ தற்போது ராஞ்சியில் நிற்கிறது. பூச்சு கூட இல்லாத சுவர், ஓழுகும் ஓடுகள் மேயப்பட்ட கூரை, ஓட்டையால் மழையில் வீடு ஒழுகாமல் இருக்கப் பொருத்தப்பட்டிருக்கும் தார்ப்பாய், கதவில்லாத வாசல், வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் சிலிண்டர், ஓரமாக இருக்கும் டிடிஹெச் குடை, ஒரு ஜோடி செருப்பு என ரஞ்சித் வசிக்கும் குடிசையிலிருந்து ஐஐஎம் வரை ராஞ்சி பயணித்த இந்த பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை.
''எனது வீடு போன்று ஆயிரம் குடிசைகளில் இருக்கும் பல கனவுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அல்லது நிறைவேறுவதற்கு முன்பாக மரணித்துள்ளது. இனி அதுபோன்று நடக்கக் கூடாது என்பதற்காக எனது பயணத்தை இங்கே பதிவிடுகிறேன்" என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார் ரஞ்சித்.
சூழ்நிலையைக் காரணம் காட்டி என்னால் இதற்கு மேல் ஓட முடியாது எனப் பலர் கூறலாம். ஆனால் அந்த சூழ்நிலையை யார் தனக்குச் சாதகமாக்குகிறார்களோ அவர்களே வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள் என்பதற்கு உண்மையான உதாரணமாக நிற்கிறார் ரஞ்சித். போதும் இதுக்கு மேல வேண்டாம் என தோணுதா, கொஞ்சம் ரஞ்சித்தை நினைத்துக் கொள்ளுங்கள் இன்னும் உங்களால் வேகமாக ஓட முடியும்.
மற்ற செய்திகள்