‘அப்போ ZOHO-ல செக்யூரிட்டி வேலை, ஆனா இப்போ..!’.. சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றிக் கதை..!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஜோகோ தொழில்நுட்ப நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிய இளைஞர் அதே நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பன்னாட்டு நிறுவனமான ஜோகோ (ZOHO), சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து 1996-ம் ஆண்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஜோகோவை தொடங்கினர். தற்போது அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உட்பட 7 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
உலகில் இருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவிற்கு ஜோகோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஜோகோ நிறுவனத்தில் திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பு இருக்கும் என அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில், ஜோகோவில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் மென்பொருள் பொறியாளராக மாறிய கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு வெறும் 1000 ரூபாய் பணத்துடன் வேலை தேடி அப்துல் அலிம் என்ற இளைஞர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 2 மாதங்களாக சாலையோரமாக தங்கி வந்துள்ளார். இந்த சமயத்தில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ள அவருக்கு ஜோகோவில் செக்யூரிட்டி வேலை கிடைத்தது. அப்போது அங்கு வேலை செய்து வந்த ஷிபு அலெக்ஸிஸ் என்ற ஊழியர் அப்துல் அலிமிடம் நட்பாக பழகியுள்ளார். திடீரென ஒரு நாள் அப்துலிடம் அவரின் படிப்பு குறித்து ஷிபு விசாரித்துள்ளார்.
அப்போது, தனக்கு கணினி பற்றி அதிகம் தெரியாது என்றும், பள்ளியில் HTML கொஞ்சம் படித்ததாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட சிபு, மேலும் படிக்க ஆர்வம் இருந்தால் தன்னை வந்து சந்திக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அதைக் கேட்டதும் அபுதுல் அலிமிற்கு மென்பொருள் பற்றி தெரிந்துகொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தினமும் தனது 12 மணிநேர செக்யூரிட்டி பணியை முடித்துவிட்டு, ஷிபுவிடம் Coding கற்று வந்துள்ளார்.
நாள்கள் செல்ல செல்ல Coding-ல் அவருக்கு அதிகம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 8 மாதங்கள் கழித்து அபுதுல் அலிம், சொந்தமாக ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். அப்துலின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்த ஷிபு, ஜோகோவில் திறமைக்கே முதலிடம் என்றும், கல்லூரி பட்டம் தேவையில்லை என்றும் கூறி, அப்துல் உருவாக்கிய ஆப்பை தனது மேனேஜரிடம் காட்டியுள்ளார்.
அப்துலின் திறமையைக் கண்டு வியந்த மேனேஜர், அவரை ஒரு நேர்காணலுக்கு அழைத்தார். அதில் சிறப்பாக அப்துல் பதிலளித்ததால், ஜோகோவில் Coder-ஆக பணி அமர்த்தப்பட்டுள்ளார். 8 வருடங்கள் கழித்து தனது வெற்றிப் பயணம் பற்றிய கதையை தற்போது LinkedIn அப்துல் அலிம் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் அப்துல் அலிமிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்