'எப்படி இவருக்கு மட்டும் வெயிட் கம்மி ஆச்சு...' 'அப்படி என்னதான் சாப்பிட்டாரு...?' வைரலாகும் இளைஞர்... !
முகப்பு > செய்திகள் > கதைகள்தன்னுடைய விடாமுயற்சியால் 28 கிலோ எடையை இரண்டே வருடத்தில் குறைத்த கார்த்திக் மாலிக்கை பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்திவரும் செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிறுவயது முதலே எந்த வித கட்டுப்பாடும், அக்கறையும் இல்லாமல் நினைந்த நேரத்திற்கு தனக்கு பிடித்த பொருளை சாப்பிட்டு 17 வயதில் 100 கிலோ எடையுடன் வாழ்ந்து வந்தார் கார்த்திக் மாலிக். பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும்போது தான் தன்னுடைய உடல் எடையை பற்றிய கவலை அவருக்கு ஏற்பட்டதாக கூறுகிறார். தன் நண்பர்களை போல் வேகமாக நடக்கவும், ஓட முடியாமலும், கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளில் பங்குபெற முடியாமலும் தனிமையின் சிறையில் மாட்டிக்கொண்டுள்ளார். ஒரு சிலர் இவரை கிண்டல் செய்வதும் இவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் எல்லோரை போலவே உடற்பயிற்சி கூடத்தையே தேர்ந்தெடுத்தார் கார்த்திக். அதில் சிறிது அளவே மாற்றம் தென்பட்டாலும் வேறு ஒரு ஐடியாவை முன்னெடுத்தார். வெறும் உடற்பயிற்சி மட்டும் இத்தனை அதிகமான உடல் எடையை குறைக்க கைக்கொடுக்காது என்பதை உணர்ந்த கார்த்திக் அவருக்கென்று ஒரு மாத அட்டவணையை வாங்கி அதில் வாரத்தில் 6 நாட்கள் தான் செய்யப்போகும் செயல்களை குறித்து கொள்கிறார். அவர் தன்னுடைய மாத அட்டவணையில் உணவுமுறை, தூக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை திட்டமிட்டு செயல்படுத்தவும் செய்துள்ளார்.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம், சிறிது யோகா, தினமும் 2 மணி நேரம் ஓட்டம் மற்றும் பேக் மற்றும் பைசெப்ஸ் உடற்பயிற்சிகள், கார்டியோ உடற்பயிற்சி, மார்பு, தோள்பட்டை, முத்தசைகளுக்கான உடற்பயிற்சிகள், கால்களுக்கு உரிய உடற்பயிற்சிகள், சர்க்யூட் அல்லது ஏரோபிக் பயிற்சிகள், கார்டியோ உடற்பயிற்சிகள் போன்றவற்றை நாட்களுக்கு ஒன்று என்கிற வீதம் செய்ய தொடங்கியுள்ளார். ஒரு மாதம் விடாமல் செய்தால் மட்டுமே மாற்றம் ஏற்பட துவங்கும் என்பதையும் அவர் முக்கியமாக குறிப்பிடுகிறார்.
உணவு முறையில் அதிக உணவு எடுத்துக்கொள்ள கூடாது என்பதை விட அதிக கலோரிகள் அடங்கிய உணவை தவிர்க்கவேண்டும் என்பதையும் கூறுகிறார். அவருடைய உணவு முறையில் நிறைய கீரைவகைகள், முட்டை, பால், பருப்புவகைகள், வேகவைத்த காய்கறிகள், சப்பாத்தி, சிக்கன், சூப் ஆகியவைகள் இடம் பெறுகின்றன.
அவருக்கு பிடித்த சாக்லேட்ஸ், இனிப்பு வகைகள், எண்ணையில் பொரித்த உணவுகள், சிப்ஸ் ஆகிய அனைத்தையும் தன் உடல் ஆரோக்கியத்திற்காக ஒதுக்கி வைத்துள்ளார்.
உடல் எடை குறைந்த பின் அவரை போலவே அவருடை வாழ்க்கையும் அழகுள்ளதாகவும், ஆரோக்கியமானதாகவும் செல்வதாக கூறியுள்ளார். இப்பொழுது அவரால் தனக்கு பிடித்த உடை அணிய முடிகிறது, அங்கும் இங்கும் ஓடி வேலை செய்ய முடிகிறது என தன்னுடைய விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியை அகமகிழ்வோடு வெளிப்படுத்துகிறார் கார்த்திக் மாலிக்.