கார் ஓட்ட தெரியாத காதலி.. Impress பண்ணணும்ன்னு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. இந்தியாவை அதிர வைத்த சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக இளைஞர் ஒருவர் மேற்கொண்ட முயற்சியும், அதன் காரணமாக நடந்த பயங்கர சம்பவமும், இந்தியாவையே அதிர வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் முன்கேலி என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரா குர்ரே. இவர், தனது காதலியுடன் பிலாஸ்பூர் என்னும் பகுதியை அடுத்த கோட்டா ரோடு என்னும் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தனது காதலியை ஈர்ப்பதற்காக ஒரு விபரீத முடிவை ரவீந்திரா மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதாவது, காரை தன்னுடைய காதலியிடம் ஓட்டச் சொல்லி, ரவீந்திரரா அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது காதலிக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், முதலில் கார் ஓட்டவும் அவர் மறுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ரவீந்திரா தொடர்ந்து வற்புறுத்தவே, பின்னர் அவரின் காதலி கார் ஓட்ட சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சுத்தமாக கார் ஓட்ட தெரியாத அந்த பெண், ஸ்டியரிங்கை பிடித்த படி, மெல்ல மெல்ல சென்ற நிலையில், திடீரென ஏற்பட்ட உற்சாகத்தால், சிறிது தூரம் சென்றதும் ஆக்சிலேட்டரை மிக வேகமாக அந்த பெண் அழுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, திடீர் வேகம் எடுத்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது படு வேகமாக மோதி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மிக பயங்கரமாக நிகழ்ந்த இந்த விபத்தில், கார் இடித்த வேகத்தில் ரோட்டில் பல மீட்டர் தூரம் அந்த பைக் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த பைக்கில் இருந்த மூன்று பேர்களில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மூன்றாவது நபரான துளசிராம் என்பவர், உடலில் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால், அப்பகுதியை சுற்றி கிராமவாசிகள் அதிர்ந்து போன நிலையில், அவர்கள் அனைவரும் ரவீந்திரா மற்றும் அவரது காதலியை சூழ்ந்து கொண்டனர். தொடர்ந்து, போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ரவிந்தரா மற்றும் அவர் காதலியை போலீசார் அழைத்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கார் ஓட்ட தெரியாத காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக அவரை கார் ஓட்ட வைத்து, விபத்தும் நிகழ்ந்த சம்பவம், பலரையும் பதைபதைப்புக்குள் ஆக்கி உள்ளது.
மற்ற செய்திகள்