'கஷ்டப்பட்டாலும் நல்லா படிச்சு ஸ்காலர்ஷிப்ல அமெரிக்கா போன பொண்ணு'... 'ஊருக்கு வந்த இடத்தில் நடந்த கொடூரம்'... நிலைகுலைந்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉதிர்ப்பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் சுதீக்ஷா பாட்டி. மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் படிப்பில் படு சுட்டி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வில் 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் புகழ்பெற்ற 'Babson College'யில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. நாங்கள் கஷ்டப்பட்டாலும் மகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று மகளைப் படிக்க அமெரிக்காவிற்கு அவரது பெற்றோர் அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு வந்துள்ளார். இதையடுத்து இந்த மாதம் அமெரிக்கா திரும்பத் திட்டமிட்டிருந்த சுதீக்ஷா படிப்பு சம்பந்தமான சில பொருட்களை வாங்குவதற்காக புலாந்த்ஷாரில் உள்ள உறவினர் வீட்டிற்குத் தனது மாமாவுடன் நேற்று மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். பைக்கில் அவர் சென்று கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் வந்த இரண்டு இளைஞர்கள் சுதீக்ஷாவை கிண்டல் செய்துள்ளார்கள். கிராமத்திற்கு அருகில் வரவர இவர்களுக்கு வழிவிடாமல் முன்னும் பின்னுமாகக் குறுக்கே வந்துள்ளனர்.
சுதீக்ஷாவை மோசமான வார்த்தைகளால் கிண்டல் செய்து கொண்டே வந்த நிலையில், சுதீக்ஷா சென்ற பைக்கிற்கு பின்னால் திடீரென்று வந்து இடித்ததால் இருவரும் நிலைதவறி கீழே விழுந்தனர். விபத்து நடந்தவுடன் சுதீக்ஷாவுக்கு தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழே விழுந்ததைப் பார்த்த உடனே அந்த நபர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என சுதீக்ஷாவின் மாமா சதேந்தர் பாட்டி கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இளம்பெண் சுதீக்ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணை நடத்தி வரும் நிலையில், அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் விபத்து நடந்த நேரத்தில் சுதீக்ஷா உறவினருடன் இருந்ததாக போலீசார் கூறியுள்ளார்கள். இதற்கிடையே மகளின் திடீர் மரணம் மொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.
மற்ற செய்திகள்