'வாங்குறதுக்கு வாங்க'.. போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை அழைத்து 'பொங்கல்' வைத்த பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜார்கண்ட் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போன்று நடித்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை, பெண் ஒருவர் நடுரோட்டில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வாங்குறதுக்கு வாங்க'.. போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை அழைத்து 'பொங்கல்' வைத்த பெண்!

ஜம்ஷட்பூரைச் சேர்ந்த ராக்கி சர்மா என்பவரின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போன்று சென்று, வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று சில பெண்களுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்றுள்ளார். வீட்டில் இருந்த ராக்கி சர்மா தனது  சொந்த பிரச்சனை ஒன்றை தீர்த்து வைக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு 50,000 ரூபாய் லஞ்சம் தரும்படி, மர்மநபர் கேட்டுள்ளார். இதனை தர மறுத்த ராக்கி சர்மாவை அடையாளம் தெரியாத அந்த நபர் மிரட்டியதுடன் சிறையில் தள்ளிவிடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பணம் பின்பு தருவதாக கூறிய ராக்கி சர்மா, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அணுகியுள்ளார். அப்போது தான் ராக்கி சர்மாவுக்கு வந்த மர்ம நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ராக்கி சர்மா நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்பு கொண்டபோது, எந்தவித முன்னறிப்புவின்றி சோதனை நடைபெறாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்பின்னர் காவல்துறையின் உதவியுடன் அடையாளம் தெரியாத நபரை பணம் தருவதாகக் கூறி, ராக்கி சர்மா வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போன்று நடித்த இளைஞரை, ராக்கி சர்மா பலமாக தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

போலியாக நடித்த அந்த நபர் ஃபலேந்திரா மேக்தோ என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதுபானக் கடை உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போன்று நடித்து மேக்தோ பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

CHEATING, THRASHED, JAMSHEDPUR