'உங்க அழகுல நான் மயங்கிட்டேன்'... 'மேட்ரிமோனி மூலம் இரு இளைஞர்கள் போட்ட மாஸ்டர் பிளான்'... இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப கதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இணையதளத்தில் பழகும் நபர்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை எச்சரிக்கை செய்தும் படித்த பெண்கள் அதில் சிக்குவது மிகவும் வேதனையான ஒரு விஷயம் ஆகும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

'உங்க அழகுல நான் மயங்கிட்டேன்'... 'மேட்ரிமோனி மூலம் இரு இளைஞர்கள் போட்ட மாஸ்டர் பிளான்'... இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப கதி!

பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர் சாரா(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). சாராவுக்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்த நிலையில், சாரா தனது புகைப்படம், மற்றும் தன்னை பற்றிய விவரங்களைத் திருமண இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராவின் செல்போன் எண்ணுக்கு அமீன் இஸ்லாம் என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசிய அந்த நபர், திருமண இணையதளத்தில் உங்கள் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், நீங்கள் ரொம்ப அழகாக இருப்பதாகவும் வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார்.

மேலும் உங்களைப் பிடித்து இருப்பதால் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து சாராவும், அமீனும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்து உள்ளனர். அப்போது சாராவுக்கும் அமீனை பிடித்துள்ளது. சில நாட்கள் சென்ற நிலையில், தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி உள்ளது. இதனால் தனக்குப் பணம் தந்து உதவும்படி சாராவிடம், அமீன் கேட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அமீன் கூறிய வங்கிக்கணக்கிற்குச் சாரா ரூ.10 லட்சம் வரை அனுப்பி வைத்து உள்ளார்.

பணம் அமீனின் கைக்கு வந்த நிலையில், டந்த சில தினங்களாக சாராவிடம், அமீன் பேசாமல் இருந்து வந்து உள்ளார். ஆசையாகப் பேசி வந்த நபர் திடீரென பேசாமல் போனது சாராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாரா தினமும் அமீனை செல்போனில் தொடர்பு கொண்டு வந்த நிலையில், சாராவின் அழைப்புகளை அமீன் நிராகரித்துள்ளார். அப்போது தான் பெற்றோரின் மருத்துவச் செலவுக்கு என்று கூறி தன்னிடம் ரூ.10 லட்சத்தை வாங்கி அமீன் மோசடி செய்தது சாராவுக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டது குறித்து அதிர்ந்துபோன சாரா, சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இதேபோன்று பெங்களூரு எம்.ஜி.கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது புகைப்படம் மற்றும் தனிப்பட்ட விவரங்களைத் திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். அதைப் பார்த்து இளம்பெண்ணின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் தனது பெயரை கெல்வின் ரோமஸ் என்று அறிமுகம் செய்துள்ளார். மேலும் தான் அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாகவும், உங்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் கெல்வின் உங்களுக்கு அமெரிக்காவிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த பரிசுப் பொருளை அனுப்பி இருப்பதாகவும், தான் கூறும் எண்ணுக்கு ரூ.1 லட்சம் செலுத்தி அந்த பரிசை பெற்றுக் கொள்ளலாம் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

அதை உண்மை என நம்பிய அந்த பெண் கெல்வின் கூறிய வங்கிக்கணக்குக்கு ரூ.1 லட்சத்தைச் செலுத்தினார். ஆனால் கெல்வின் கூறியபடி அந்த பெண்ணிற்குப் பரிசு எதுவும் வரவில்லை. இளம் பெண்ணை ஏமாற்றி கெல்வின் ரூ.1 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாகப் பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நன்கு படித்த பெண்கள் இதுபோன்ற மோசடிக்கு இரையாவது தொடர்கதையாகி வருவது தான் வேதனையின் உச்சம்.

மற்ற செய்திகள்