‘தோளில் கணவர்.. முதுகில் அடி.. தள்ளாடி நடக்கும் இளம் பெண்’.. பதைக்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் வேற்று சாதியினத்தவரை திருமணம் செய்துகொண்ட பெண்ணொருவருக்கு அம்மக்கள் கொடுத்துள்ள தண்டனை பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் போபால் மாநகரத்துக்குட்பட்ட ஜாபுவா மாவட்டத்தில் நடந்துள்ள இந்த கொடுமை வீடியோவாக இணையத்தில் பரவி பலரையும் பதைபதைப்புக்குள்ளாக்கி வருகிறது. வேற்று சாதியினத்தவரை திருமணம் செய்துகொண்டதால், இந்த ஊரைச் சேர்ந்த அந்த 20 வயது பெண்ணுக்கு தண்டனையாக, அந்த பெண் தன் கணவரை தோளில் சுமந்துகொண்டே வெகுதூரம் நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அந்த தண்டனைக்கு கட்டுப்பட்டு தன் கணவரை தோளில் சுமந்துகொண்டு நடக்கும் இந்த பெண், சில நொடிகள் ஓய்வெடுத்தாலும் உடனே ஈவிரக்கமின்றி அந்த பெண்ணை அந்த ஊரார் அடிக்கின்றனர். வலி பொறுக்க முடியாத அந்த பெண் மீண்டும் வலியைத் தாங்கிக்கொண்டு நடக்கிறார்.
வீடியோவாக இணையதளத்தில் பரவும் இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய போலீஸார், இந்த கொடுமையான சம்பவத்தை அறிந்தவுடனே, அவ்வாறு அந்த பெண்ணை துன்புறுத்திய கிராம இளைஞர்கள் மற்றும் சில பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
20 வயது வந்த பெண், தன் திருமணத்தை தானே முடிவு செய்வதற்கு சட்டரீதியாக தகுதியானவர் என்றிருக்க, அவர் மாற்று சாதியினைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்துகொண்டதால் அவருக்கு இப்படியான தண்டனையை அளித்து சிலர் துன்புறுத்தியுள்ள இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே, குறிப்பாக இளம் பெண்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.