‘அப்போ சிறுமிகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கும் ஆடைதான் காரணமா?’.. பெண்மணியின் செயலுக்கு இளம் பெண்கள் பதிலடி.. பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாகவே பெண்களின் ஆடைக்கும், ஆண்களின் வக்கிரத்துக்கும் தொடர்பில்லை, அவரவர் பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது என்பது பெண்ணுரிமை பேசுபவர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.
ஆனால், டெல்லி குர்கானில் மால் ஒன்றில் பெண்மணி ஒருவர் இளம் பெண்கள் சிலர் அணிந்திருந்த மாடர்ன் டிரெஸ்களைப் பார்த்துவிட்டு, அதே மாலில் இருந்து ஏழெட்டு ஆண்களிடம் சென்று, அந்த இளம் பெண்கள் அரைகுறை ஆடையணிந்திருப்பதால் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்குமாறு பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண்கள், அந்த பெண்மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தங்களுடைய உடை அணியும் விதத்தைப் பற்றி தவறுதலாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிடின் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்துவிடுவதாகவும், மாலில் சிசிடிவி உள்ளதால் போலீஸில் புகார் அளிப்பதாகவும் அந்த இளம் பெண்கள் மிரட்டியுள்ளனர்.
மேலும், ஒரு வயது குழந்தை பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாவதற்கும் ஆடைதான் காரணமா என்றும் அப்பெண்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆனாலும் மன்னிப்பு கேட்காத அந்த பெண்மணி, ‘மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஆடைகளை அணிகிறீர்கள். சரிதான். இந்த வீடியோவைப் பார்க்கும் நீங்கள் பெற்றோர்களாக இருந்தால் உங்கள் பெண்களை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளுங்கள், இல்லேல் இவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளால் இவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளலாம்’ என்று பேசுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.