‘கொரோனா பரவலை சிறப்பா தடுக்கிறாங்க’... ‘அந்த மாநிலம் எடுத்துக்காட்டாக இருக்கு’... ‘உலக சுகாதார அமைப்பு பாராட்டு’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆஃப்ரின், கூறியதாவது, ‘கொரோனா பாதித்தவர்களின் தொடர்புகளை அடையாளம் காண்பதில் உத்தரப்பிரதேச அரசின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது. 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடுகள், மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக அமைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.
மேலும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மற்றும் அம்மாநில கொரோனா தடுப்பு நிர்வாகிகள், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் ஆபத்தான தொடர்புகளை கண்டறிவதில், சிறப்பாக செயல்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளதாக அம்மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனுடன், ‘நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை மேம்படுத்த மாநில அரசுக்கு, உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கள கண்காணிப்பில் ஈடுபடுவோருக்கு பயிற்சியும் அளித்தது. கள கண்காணிப்புகள் மூலமாக மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58,000 பேர் கண்டறியப்பட்டனர்’ என்று உலக சுகாதார அமைப்பின் தேசிய போலியோ கண்காணிப்பு திட்டத்திற்கான உத்தரப்பிரதேச மண்டல குழுத் தலைவர் மதுப் பாஸ்பாய் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்