'வெளிநாட்டு' வேலைக்கு போறவங்க... 'கண்டிப்பா' இதெல்லாம் செய்யணும்... முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீபத்தில் நடைபெற்ற அரசு விழாவொன்றில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தெரிவித்தார். அதன்படி வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதை படித்துப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்பவர்கள் தங்கள் பணிக்கேற்ப அனுமதியை முறையாக பெற்று பயணம் மேற்கொள்ள வேண்டும். பணிக்காலம் முடிந்ததும் உரியமுறையில் புதுப்பித்து பணியாற்ற வேண்டும். அரசு பதிவு பெற்ற முகவர்கள் மூலமாக தான் செல்ல வேண்டும்.
2. அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தன்வசம் கூடுதலாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக வேலைக்கு செல்லும் போது அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் கலாச்சாரங்களை மதித்து நடந்திட வேண்டும். வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் போது யாதொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படுவது கண்டறிந்தால் வேலை செய்யும் நாட்டிலோ அல்லது சொந்த நாட்டிலோ குற்ற வழக்கு தொடரப்படும். பணிபுரியும் போது ஏதேனும் உதவி வேண்டும் என்றால் உடனடியாக இந்திய தூதரகத்தை அணுகி உதவி பெற்றிட வேண்டும்.
3. தாங்கள் பணிபுரியும் இடம், நிறுவனம் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வீட்டு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். அதேபோல் சென்றடைய வேண்டிய நாட்டை அடைந்தவுடன் அங்குள்ள இந்திய தூதரகத்தை அல்லது துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் கடவுச்சீட்டு குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. பணியாற்றும் போது ஏதேனும் இடர்பாடுகள் வந்தால் உடனடியாக இந்திய தூதரகத்தை அணுகவேண்டும். புலம் பெயர் மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்கு 11 மொழிகளில் தேவையான தகவல்களை 24 மணி நேர உதவி சேவையினை வெளிநாடு வாழ் இந்தியருக்கான உதவி மையம் வழங்குகிறது. இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.