சொந்த 'ஈகோ' தான் உங்களுக்கு 'முக்கியமா' போயிடுச்சு இல்ல...! 'மம்தாவை கடுமையாக விமர்சித்த ஆளுநர்...' - பதிலடி கொடுத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஈகோ பெரிதாகிவிட்டது என மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, யாஸ் புயலால் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அக்கூட்டத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதிகாரிகளும் அரைமணி நேரம் தாமதமாக வந்தார். அதோடு முழு கூட்டத்தில் பங்கு பெறாமல் மம்தா பானர்ஜி தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியின் செயல் குறித்து மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதில், 'தற்போது இணையத்தில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால், உண்மையை தெளிவுபடுத்த இதை சொல்கிறேன்.
ஆய்வுக்கூட்டத்துக்கு முந்தைய நாள் இரவு 11.16 மணிக்கு மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து என்னிடம் அவசரமாக பேச விரும்புவதாக தகவல் கூறியிருந்தனர்.
அதன்பின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி, பிரதமருடனான ஆய்வுக்கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் (சுவேந்து அதிகாரி) பங்கேற்றால், தானும், தனது அதிகாரிகளும் புறக்கணித்து விடுவோம் என்பதை இலைமறை கைமறையாக தெரிவித்தார். அதேபோல் பங்கேற்கவும் இல்லை.
மக்கள் சேவையை விட இவர்களுக்கு தங்கள் சொந்த ஈகோ முக்கியமாகி விட்டது. என்ன செய்வது' என பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி கூறித்து அறிந்த திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அக்கட்சியின் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில், 'ஆளுநர் தன்கரின் கருத்து துரதிருஷ்டவசமானது. இப்படி பேச அவருக்கு அதிகாரம் இல்லை. மம்தா பானர்ஜி 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளாா்.
மாநில மக்களின் நலன் மீதான அக்கறை அடிப்படையிலேயே அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்' எனக் கூறியுள்ளார்.
மேலும் மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாயாவை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்