"கடவுள் பார்வையை கொடுக்கல.. ஆனா நிறையவே நம்பிக்கையை கொடுத்திருக்காரு"..UPSC தேர்வில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபார்வை மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் UPSC தேர்வில் டாப் 50 ரேங்கில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
Also Read | ‘செம சர்ஃப்ரைஸ்’.. IPL கப் ஜெயிச்ச குஜராத் 6-வது இடம்.. RCB முதலிடம்.. வெளியான ‘வேறலெவல்’ தகவல்..!
யுபிஎஸ்சி
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான எழுத்து தேர்வுகள் இந்த ஆண்டு ஜனவரி மாதமும், நேர்காணல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகளை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்.
பிறவியிலேயே
டெல்லியின் ராணி கேரா பகுதியைச் சேர்ந்தவர் ஆயுஷி. 29 வயதான இவருக்கு பிறவியிலேயே கண்பார்வை கிடையாது. இவர் தற்போது டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய குறைபாடுகளை தாண்டி வாழ்வில் வெற்றிபெறவேண்டும் என உறுதிகொண்ட ஆயுஷி UPSC தேர்வுக்கு படித்துவந்திருக்கிறார். இதன் பலனாக 5வது முயற்சியில் தேர்வில் வெற்றிபெற்று அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் ஆயுஷி.
டாப் 50
கடந்த திங்கட்கிழமை அன்று வெளியான தேர்வு முடிவில் ஆயுஷி இந்திய அளவில் 48வது இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"என் கனவு கைகூடியிருக்கிறது. டாப் 50க்குள் வந்ததை நம்பவே முடியவில்லை. அனைவரும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என்று உணர்ச்சிபொங்க தெரிவித்தார். உள்ளூரிலேயே பள்ளிக்கல்வியை முடித்த ஆயுஷி, ஷியாம பிரசாத் முகர்ஜி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, IGNOU-வில் வரலாற்று பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார்.
தன்னுடைய அம்மா குறித்து பேசிய ஆயுஷி,"நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள். வளர்ந்த பிறகு 2016 ஆம் ஆண்டுமுதல் UPSC தேர்வுக்காக படிக்கத் துவங்கினேன். எனக்கு என்னுடைய அம்மா பக்கபலமாக இருந்தார். என்னை கவனித்துக்கொள்வதற்காக தன்னுடைய செவிலியர் பணியையும் அவர் ராஜினாமா செய்தார். பாடங்களை ரெக்கார்ட் செய்து அதன்மூலம் நான் படித்தேன். அம்மா தான் என்னுடைய படிப்பில் எனக்கு நிறைய உதவிகளை செய்தார்" என்றார்.
நம்பிக்கை பாதை
ஆயுஷியின் கணவர் ஆஸ்திரேலியாவில் மேலாண்மை படிப்பை மேற்கொண்டுவருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆயுஷியின் தந்தை பணிபுரிந்துவர, தாய் ஆஷா ராணி மூலமாகவே தனது வெற்றியை அடைந்துள்ளார் ஆயுஷி.
தன் மகளின் வெற்றி குறித்து பேசிய ஆஷா,"கடவுள் அவளுக்கு பார்வையை கொடுக்கவில்லை என்றாலும் நம்பிக்கையினாலான பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இன்று அவள் சாதிக்க காரணமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து இன்று சாதனை படைத்திருக்கிறார் என் மகள். அவளது மன உறுதியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.
மற்ற செய்திகள்