'திறந்த வெளியில் 'மலம் கழித்தால்' போட்டோ எடுத்து அனுப்புங்க'...'சலுகை காத்திருக்கு '...அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிறந்தவெளியில் மலம் கழித்தால் அவர்களது குடும்ப ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என, கிராம பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் கழிவறைகள் இல்லாத வீடுகளுக்கு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவசமாக கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் கிராமப்பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதனால் பல சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதிலும் இது கட்டுக்குள் வராத நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜரண்டி என்ற கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் யாராவது திறந்த வெளியில் மலம் கழித்தால் அவர்களின் குடும்ப ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு படிமேல் திறந்த வெளியில் மலம் கழிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பவர்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான முடிவு குறித்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கூறும்போது, ''எங்களது கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் உள்ளன. ஆனால் அதனை மக்கள் பயன்படுத்தாமல் சாலை ஓரங்களிலும், திறந்த வெளியிலும் மலம் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். சிறுவர்களும் இதை பின்பற்றுவது மிகவும் வேதனைக்கு உரியது ஆகும்.
இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு தோற்று வியாதிகள் பரவுகின்றன. இதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறினார். இதனை மாவட்ட நிர்வாகம் வரவேற்றுள்ளது. இந்த முடிவு சற்று விநோதமானதாக தெரிந்தாலும் சுகாதார சீர்கேட்டினை தடுக்க, நிச்சயம் இது பாராட்டுக்குரிய முடிவு ஆகும்.