'அந்த வீடியோ உண்மையானது அல்ல’... 'உள்நோக்கத்துடன்' வெளியிடப்பட்ட 'வீடியோ' அது... 'இந்திய ராணுவம் மறுப்பு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லடாக் எல்லை மோதல் தொடர்பாக வெளியான வீடியோ உண்மையானது அல்ல என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

'அந்த வீடியோ உண்மையானது அல்ல’... 'உள்நோக்கத்துடன்' வெளியிடப்பட்ட 'வீடியோ' அது... 'இந்திய ராணுவம் மறுப்பு...'

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவமும் தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக ரீதியில் சமரச முயற்சி மேற்கொண்டு உள்ளன.

இந்த நிலையில், அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றும் வெளியானது. அந்த வீடியோ எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் இல்லை.

தற்போது இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று இந்திய ராணுவம் மறுத்து இருக்கிறது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. வடக்கு எல்லையில் உள்ள சூழ்நிலையை தொடர்புபடுத்தி உள்நோக்கத்துடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. எனவே அந்த வீடியோ உண்மையானது அல்ல" என்று ராணுவம் நிராகரித்துள்ளது.

மேலும், "நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக பெரிதுபடுத்த நடக்கும் முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த வீடியோ, எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலையை திசை திருப்பும் வாய்ப்பு இருப்பதால் அதை ஒளிபரப்ப வேண்டாம் என்று காட்சி ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம்." என்றும் ராணுவம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்