குரங்குகளுக்கு ஏக்கர் கணக்குல நிலம் எழுதி வெச்சிருக்காங்க.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா?.. சுவாரஸ்ய பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குரங்குகளுக்கு என ஏக்கர் கணக்கில் நிலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை எப்போது யார் பதிவு செய்தது என தெரியவில்லை என்று கிராம அதிகாரிகளே ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். மேலும், பல ஆண்டுகளாகவே இந்த கிராமத்தில் குரங்குகள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

குரங்குகளுக்கு ஏக்கர் கணக்குல நிலம் எழுதி வெச்சிருக்காங்க.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா?.. சுவாரஸ்ய பின்னணி..!

இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் குரங்குகளை வழிபட்டும், பாதுகாத்தும் வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல கோவில்களில் கூட்டமாக வசித்துவரும் குரங்குகளுக்கு பக்தர்கள் உணவுகளை வழங்கியும் வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் குரங்குகளுக்கு என தனியாக 32 ஏக்கர் நிலம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இது எப்போது நடந்தது என்பதே தெரியவில்லை என்கிறார்கள் கிராம அதிகாரிகள்.

இது ஒருபுறம் இருந்தாலும், இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், குரங்குகளை அன்போடு பராமரித்து வருகின்றனர். தங்களது வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் குரங்குகளுக்கு என சிறப்பு உணவுகளும் அளிக்கப்படுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள உப்லா கிராமத்தில் தான் இந்த வினோதம் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து பேசிய கிராம நிர்வாக அதிகாரியான பாப்பா பத்வால்,"அந்த நிலம் குரங்குகளுக்குச் சொந்தமானது என்று ஆவணங்கள் தெளிவாகக் கூறினாலும், விலங்குகளுக்காக இதனை உருவாக்கியது யார், எப்போது செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. கிராமங்களில் நடைபெறும் பல்வேறு சடங்குகளின் அங்கமாக குரங்குகள் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றன. முன்பெல்லாம் கிராமத்தில் திருமணம் நடந்தால் முதலில் குரங்குகளுக்குப் பரிசு வழங்கி அதன் பிறகுதான் விழா தொடங்கும். இப்போது எல்லோரும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை" என்றார்.

இந்த கிராமத்தில் இப்போது கிட்டத்தட்ட 100 குரங்குகள் உள்ளன. சமீப ஆண்டுகளில் இந்த குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பத்வால் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர்,"கிராமவாசிகள் குரங்குகள் தங்கள் வீட்டு வாசலில் தோன்றும் போதெல்லாம் உணவளிக்கிறார்கள். அவர்களுக்கு உணவை யாரும் மறுப்பதில்லை" என்கிறார். இந்நிலையில், இந்த கிராமம் குறித்து பலரும் வியப்புடன் பேசிவருகின்றனர்.

MONKEYS, LAND, OWNERS, MAHARASHTRA

மற்ற செய்திகள்