'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 8 பேரைத் திருமணம் செய்து ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் (Ghaziabad) சேர்ந்த 66 வயதான கட்டுமான ஒப்பந்தக்காரரான கிஷோர் என்பவருடைய மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் தனிமையில் வாடி வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனியல் ஏஜென்சி ஒன்று செய்தித்தாளில் அளித்த ஒரு விளம்பரத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய துணையை தேடித் தருவதாக தெரிவித்திருந்ததை அவர் பார்த்துள்ளார். பின்னர் அவர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள, அதன் உரிமையாளர் மஞ்சு கன்னா அவருக்கு ஏற்ற மணமகளெனக் கூறி மோனிகா மாலிக் என்பவரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து சில வாரங்கள் சந்தித்து பேசிய பிறகு இருவரும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் திருமணம் செய்து கொண்டு, கிஷோரின் வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். ஆனால் திருமணமான ஏறக்குறைய 2 மாதங்களில் மோனிகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். அதனால் அதிர்ந்துபோன கிஷோர் அந்த மேட்ரிமோனியல் ஏஜென்சியை தொடர்பு கொண்டபோது, ஏஜென்சியை சேர்ந்தவர்களும் அவரை மிரட்டியதோடு, கிஷோர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துவிடுவோம் என அச்சுறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கிஷோருக்கு மோனிகாவின் முந்தைய கணவரைப் பற்றிய தகவல் கிடைக்க, அவரைத் தொடர்புகொண்டபோது அவரும் இதேபோல் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் கிஷோர் போலீசாரிடம் மோனிகா மீது புகார் அளிக்க, விசாரணையில் மோனிகா கடந்த 10 ஆண்டுகளில் 8 முதியவர்களை இதேபோல ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் IPC பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி), 420 (மோசடி), 380 (திருட்டு), 384 (மிரட்டி பணம் பறித்தல்), 388 (அச்சுறுத்தலால் மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் 120 பி (கிரிமினல் சதி) ஆகியவற்றின் கீழ் மோனிகா, அவருடைய குடும்பத்தினர் மற்றும் திருமண நிறுவனம் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்