‘காதலனை’ தப்பிக்க வைக்க.. ‘போலி’ பாலியல் வன்கொடுமை புகார்.. போலீஸாரை ‘அதிர வைத்த’ இளம்பெண்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலனுக்கு எதிராக சாட்சி அளித்தவர்கள் மீது போலி பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை போலீஸாரிடம் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர், “நான் ஹரி பர்வட் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து வந்துகொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த 3 நபர்கள் என் சகோதரனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது எனக் கூறி என்னை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பின் அவர்கள் காரில் வைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கலிப் என்ற கிராமத்தில் காரில் இருந்து வீசிவிட்டு சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இளம்பெண் கூறிய 3 பேரைக் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களை அடையாளம் காட்டுவதற்காக போலீஸார் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண் முன்னுக்குப்பின் முரணாகவே பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அந்தப் பெண் தான் போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததாகக் கூறியுள்ளார்.
அதைக்கேட்டு அதிர்ந்துபோன போலீஸார் அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் தன் காதலனுக்காக இப்படி செய்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் புகார் அளித்த 3 பேர், அவருடைய காதலனுக்கு எதிராக ஒரு கொலை வழக்கில் சாட்சியளித்துள்ளனர். அந்த வழக்கை திசை திருப்ப தன் காதலன் வற்புறுத்தியதாலேயே அவர்கள் மீது போலி புகார் அளித்ததாக அந்தப் பெண் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண், அவருடைய காதலன் மற்றும் அவர்களுக்கு உதவிய நபர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.