தலையில் 'எச்சில்' துப்பிய ஹேர் டிரஸ்ஸர்.. ஏன் அப்படி பண்ணினேன்னா.. துப்பிட்டு விளக்கம் வேற..
முகப்பு > செய்திகள் > இந்தியாநீருக்கு பதில் எச்சிலை துப்பி, பெண் ஒருவருக்கு முடி அலங்காரம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேடைக்கு அழைத்த அழகுக்கலை நிபுணர்:
பிரபல அழகுக்கலை நிபுணரான ஜாவேத் ஹபீப், சமீபத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியுள்ளார். அந்த பயிற்சி பட்டறையில் பூஜா குப்தா என்பவரை மேடைக்கு கூப்பிட்டு அவரது முடியை அலங்காரம் செய்து பார்வையாளர்களுக்கு காண்பித்துள்ளார் ஜாவேத் ஹபீப்.
அந்த நேரத்தில் பூஜா குப்தாவின் தலையில் தனது எச்சிலை துப்பிய அவர், "பார்லரில் தண்ணீர் இல்லையென்றால் உமிழ்நீரை பயன்படுத்துங்கள்" என்று ஜாவேத் ஹபீப் கூறியதும் பார்வையாளர்கள் சிரித்து கைத்தட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஜாவேத் ஹபீப்பின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அசிங்கப்படுத்தவே மேடைக்கு அழைத்தார்:
பாதிக்கப்பட்ட பெண் பூஜா குப்தா தனது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய மனக்குமுறலை பகிர்ந்துள்ளார். அப்போது ஜாவேத் ஹபீப்பின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். பயிற்சிப்பட்டறையில் அராஜகமாக நடந்துகொண்ட ஹபீப், தன்னை கூப்பிட்டு அசிங்க படுத்தவே மேடைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜாவேத் ஹபீப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
ப்ளீஸ் என்னை மன்னித்து விடுங்கள்:
இந்த நிலையில் அழகுக்கலை நிபுணர் ஜாவேத் ஹபீப் தனது செயலுக்கு வருந்துவதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இது நடந்தது பயிற்சிப் பட்டறையில். அழகுக்கலை தொழிலில் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த அமர்வுகள் மிக நீண்டதாக இருக்கும்போது, நாம் அவற்றை போராடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும்.
அதற்காகவே நான் அப்படி வித்தியாசமாக செய்தேன். இதனால் உங்கள் மனம் புண்பட்டு இருந்தால், என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள் ப்ளீஸ்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்