'தண்ணீர்' இல்லாத கழிவறைக்கு அலங்காரமா ஒரு 'தோரணம்' ... இதை கட்றதுக்கு 'வாஷிங்டன்னிலிருந்து' தொழில்நுட்பக் குழு வேற... புலம்பும் 'ட்ரம்ப்' கிராம மக்கள்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி, ஹரியானா மாநிலத்தில் உள்ள ட்ரம்ப் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத கழிவறைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருப்பது கிராமத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017-ம் ஆண்டு அமெரிக்காவில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்துக்கொண்ட முதல் நிகழ்வின் நினைவாக ஹரியானா மாநிலத்தில் உள்ள மரோரா என்ற கிராமத்திற்கு அதிபர் ட்ரம்ப் பெயர் சூட்டப்பட்டது.
இந்த கிராமத்தில், வாஷிங்டன்னின் சமூக சேவை நிறுவனமான சுலப் இன்டர்நேஷனல் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக மாற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி பல்வேறு கழிவறைகளும் கட்டப்பட்டன.
நாளடைவில் கட்டப்பட்ட கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லா சூழல் உருவாகியுள்ளது. பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கட்டப்பட்ட கழிவறைகள் பயன்பாடற்று காணப்படுகின்றன. இக்கிராமத்தில் கோடை காலத்தில் டேங்கர் லாரிகள் மூலமாகவே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. லாரி ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை வாங்கப்படுகிறது.
தற்போது ட்ரம்ப் இந்திய வருகையையொட்டி இந்த கழிவறைகள் முன்பாக அலங்கார வளைவுகளும், பிளக்ஸ்போர்டுகளும், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் எரிச்சலடைந்த கிராமத்தினர், ட்ரம்ப் எப்போது எங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"வாஷிங்டன் நிறுவனத்தினர் வந்தார்கள் கழிவறைகளை கட்டினார்கள், கிராமத்தின் பெயரை மாற்றினார்கள், புகைப்படம் எடுத்தார்கள், போய்விட்டார்கள்" என்று கிராமத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.