“வேலைவாய்ப்பை உருவாக்க புதிய திட்டம்”!... விரிவான அறிக்கையை சமர்ப்பித்த ஆய்வாளர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் வேலை செய்பவர்களின் நிலை என்கிற ஆய்வினை மேற்கொண்ட அசிம் பிரேம்ஜி பல்கலைகழகம், அது தொடர்பான ஆய்வினை வெளியிட்டுள்ளது.
இதில், நகர்ப் புறங்களில் வேலையின்மை 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையின்மை 5.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. இதனையடுத்து, வேலையின்மை சிக்கலைத் தீர்க்க தேசிய நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் திறன் மிகுந்த தொழிலாளர்களை நகர வேலைகளுக்கு பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் தினசரி 500 ரூபாய் கூலியில், 100 நாட்களுக்கு வேலை அளிக்கலாம். மேலும், படித்த இளைஞர்களுக்கு மாதம் 13 ஆயிரம் ரூபாய் உதவி தொகை அளித்து, 150 நாட்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கலாம் என்று கூறியுள்ளது.
தொழிலாளர்களை இரண்டு வகையாக பிரித்து வேலை அளிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது. அதன்படி, முதல் பிரிவில் 12 ஆம் வகுப்பு வரை படித்த பல்வகை திறமை கொண்டவர்களை கட்டுமான தொழில், பெயின்டர்கள், எலக்ட்ரீசியன் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தலாம் என்றும், இரண்டாவது பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்கள், கம்யூட்டர் பயிற்சி சான்றிதழ் மற்றும் ஆங்கில பயிற்சி பெற்றவர்கள் என்று வகைப்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
மேலும், தொழிலாளர்களுக்கான செலவுகளை, மத்திய அரசு 80 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் என்கிற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இத்திட்டத்துக்கான செலவில் 60 சதவீதம் தொழிலாளர்களின் ஊதியத்துக்கும், 40 சதவீதம் இடுபொருட்கள் மற்றும் நிர்வாக செலவுக்கும் ஒதுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை மேம்படுத்துவது, பேரிடர் முன்னெச்சரிக்கை பணிகள், சிறு கட்டுமான பணிகள், பூங்கா சீரமைப்பு, தோட்டக்கலை வேலைகள், ரயில்வே பாதைகளில் மரக்கன்றுகள் நடுவது, பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைப்பது, மழை நீர் சேகரிப்பு வசதிகளை மேம்படுத்தச் செய்யலாம். நகர்புற தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அசீம் பிரேம்ஜி பல்கலைக் கழக ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.