ஒரு உயிரைக் காப்பாற்ற துடித்த ‘2 இதயங்கள்’!.. 6 நாள் கழித்து நடந்த அதிசயம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவருக்கு 6 நாட்கள் கழித்து இதயம் செயல்பட ஆரம்பித்த அதிசயம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் கல்பேஷ் (23). இவருக்கு கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது இதயம் சரிவர செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. 15 சதவீதம் மட்டுமே இதயம் செயல்பட்டதால், உடனே இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவரது குடும்பத்தில் வசதி இல்லை. அந்த சமயத்தில் மருத்துவர் தாவல் நாயக் என்ற இதய சிகிச்சை நிபுணரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரின் உதவியுடன் டொனேட் லைஃப் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் அறுவை சிகிச்சைக்கான இதயத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து சூரத்தில் விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் அறுவை சிகிச்சையின் மூலம் கல்பேஷுக்கு பொருத்தப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்ட புதிய இதயம் உடனடியாக செயல்படாததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் உடனடியாக கல்பேஷுக்கு செயற்கை இதயம் பொருத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து 6 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக புதிய இதயம் அவரது உடலில் செயல்பட ஆரம்பித்தது. இதனால் செயற்கை இதயத்தை மருத்துவர்கள் அகற்றினர்.
இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் தவால் நாயக், ‘இதயம் அவரது உடலில் பொருத்தப்பட்டதும் உடனடியாக செயல்படவில்லை. நோயாளியின் மன உறுதி மற்றும் மருத்துவர்களின் முயற்சியால் 6 நாட்களுக்கு பிறகு இதயம் துடிக்க ஆரம்பித்தது. கல்பேஷ் அவரது பிறந்தநாளை ஐசியுவில் கொண்டாடினார். இதனை விட பெரிய பரிசு அவருக்கு கிடைக்க முடியாது’ என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்