'புதுசா இருக்கே'... 'எப்படி தலைவா 'ஒரே டிக்கெட்டை' எல்லாரும் கேன்சல் பண்ணீங்க'... நெட்டிசன்கள் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தீபிகா படுகோனின் சபாக் திரைப்படத்திற்கான டிக்கெட்டை, ரத்து செய்துவிட்டதாக பலரும் ஒரே டிக்கெட்டை ஷேர் செய்ததால் ட்விட்டரில் சிரிப்பலை ஏற்பட்டது.

'புதுசா இருக்கே'... 'எப்படி தலைவா 'ஒரே டிக்கெட்டை' எல்லாரும் கேன்சல் பண்ணீங்க'... நெட்டிசன்கள் கிண்டல்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, முகமூடி அணிந்தவாறு ஜே.என்.யூ-வில் உள்ள சபர்மதி விடுதிக்குள் நுழைந்த 50 மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில் பிரபல பாலிவுட்  நடிகை தீபிகா படுகோன், ஜே.என்.யூ-வுக்கு வந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் போராட்டம் நடத்திய மாணவர்களுடன் நின்று அவர்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். பின்னர்  மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மாணவர்களின் போராட்டத்துக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆதரவு தெரிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் தீபிகா படுகோனை சமூகவலைத்தளங்களில் பாராட்டினார்கள். இதனிடையே நாளை தீபிகா படுகோன் நடித்த `சபாக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்ததோடு, அவரை எதிர்த்து ஹேஸ்டாக்கையும் டிரெண்ட் செய்தனர்.

அதே நேரத்தில் தீபிகாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் ஹேஸ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதற்கிடையே  சபாக் படத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 3 பேருக்கான டிக்கெட்டுகளை கேன்சல் செய்து அந்த ஆதாரத்தை ஸ்கிரீன்சார்ட் எடுத்து டுவிட்டரில் பலரும் பகிர்ந்து வந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டோம் என பகிர்ந்த அனைவரும் ஒரே டிக்கெட்டை தான் ட்விட்டரில் பகிர்ந்தார்கள். இதனால் 3 டிக்கெட்டுகளை எத்தனை பேர்தான் கேன்சல் செய்வீர்களடா? என நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து தள்ளிவிட்டார்கள். இதனால் ட்விட்டரில் பெரும் சிரிப்பலை உண்டானது.

TWITTER, DELHI, JNU, DEEPIKA PADUKONE, CHHAPAAK, TICKETS, JAWAHARLAL NEHRU UNIVERSITY