"புருஷன் விட்டுட்டு போய்ட்டான்.. அந்த பெண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்க".. மிரட்டிய கும்பல்..விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரிபுரா மாநிலத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை மணந்துகொள்ளும்படி இளைஞர் ஒருவர் வற்புறுத்தப்பட்டதால் அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | டூவீலரை டெம்போவாக பயன்படுத்தும் இளைஞர்.. வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட கமெண்ட் தான் வெயிட்டே..!
திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டம் நாமபாரா பகுதியை சேர்ந்தவர் லிட்டன் தாஸ். 30 வயதான தாஸ் நேற்று தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது குறித்து லிட்டன் தாஸின் சகோதரி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாயத்து
லிட்டன் தாஸ் சம்பமுரா பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவருடன் பழகி வருவதாக அதே பகுதியை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, அந்தப் பகுதியில் இயங்கிவரும் கிளப் ஒன்றை சேர்ந்த நபர்கள் லிட்டனை பேச்சுவார்த்தைக்காக அழைத்ததாக அவரது மூத்த சகோதரி காவல்துறையில் தெரிவித்திருக்கிறார். அப்போது, தனது சகோதரரை அந்த கிளப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிறைபிடித்து வைத்திருந்ததாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இதுகுறித்து லிட்டன் தாஸின் சகோதரி,"உள்ளூர் கிளப்பின் உறுப்பினர்கள் சிலர் லிட்டன் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டினர். பின்னர் அவரை சமரச பேச்சு வார்த்தைக்காக வலுக்கட்டாயமாக கிளப்புக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த பெண்ணுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று எனது சகோதரர் கடுமையாக மறுத்தார்" என தெரிவித்திருக்கிறார்.
திருமணம்
தனது சகோதரரை அழைத்துச் சென்றதும் குடும்பத்தாருடன் கிளப்பிற்கு சென்றிருக்கிறார் லிட்டனின் சகோதரி. அப்போது கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படியும் பிரச்சனையை தீர்க்க ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கிளப்பை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.
இதுபற்றி பேசிய லிட்டனின் சகோதரி,"எங்கள் முன்னிலையில், கிளப் உறுப்பினர்கள் லிட்டனை அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர், மேலும் பிரச்சினையைத் தீர்க்க ₹ 1 லட்சம் கேட்டனர். இருப்பினும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு புகாரளிக்க பரிந்துரைத்தோம். ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை." என்றார்.
இருப்பினும், கிளப்பை சேர்ந்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாயை தங்களது குடும்பத்தினர் வழங்கியதாகவும் இதனால் மனமுடைந்த தனது சகோதரர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாகவும் கூறிய லிட்டனின் சகோதரி இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
Also Read |ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. தரைமட்டமான வீடுகள்.. சுமார் 255 பேர் உயிரிழப்பு..!
மற்ற செய்திகள்