'பக்கத்தில் நெருங்க முடியாத துயரம்'... கதறிய மகளைப் பார்த்து... கண்ணீர் விட்ட தாய்... ஃபோனில் அழைத்து முதல்வர் சொன்ன வார்த்தைகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றும் தாயை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தும் நெருங்க முடியாத குழந்தை கதறி அழுதது பலரது நெஞ்சை உலுக்கிய நிலையில், முதல்வர் எடியூரப்பா அவரை ஃபோனில் அழைத்து சமாதானம் கூறி ஆறுதல் சொல்லியுள்ளார்.

'பக்கத்தில் நெருங்க முடியாத துயரம்'... கதறிய மகளைப் பார்த்து... கண்ணீர் விட்ட தாய்... ஃபோனில் அழைத்து முதல்வர் சொன்ன வார்த்தைகள்!

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் சுகந்தா, தற்போது கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார்.  இதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கடந்த சில வாரங்களாக அவர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படாமல், மருத்துவமனைக்கு அருகில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார். 11 நாட்கள் ஆனநிலையில், அவரின் 3 வயது மகள் தினமும் தாயைக் கேட்டு தந்தையிடம் அடம் பிடித்துள்ளார்.

இதனை அடுத்து, மகளை பைக்கில் அழைத்துக்கொண்டு மனைவி தங்கியுள்ள விடுதிக்கு அழைத்து வந்தார் கணவர். எனினும், தூரத்தில் இருந்தே அவர்கள் பார்க்க வேண்டிய நிலை என்பதால், “மம்மி... வா..” என்று அந்தக் குழந்தை கதறி அழுதது. இந்த வீடியோ வைரல் ஆனநிலையில், அவரை ஃபோனில் தொடர்பு கொண்டு, அம்மாநில முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளார். அதில், ‘நீங்கள் உங்களது குழந்தையை கூட பார்க்காமால், உங்களை வருத்தியும், மிகவும் கடின உழைப்புடன் பணியாற்றி வருகிறீர்கள்.

உங்கள் மகளுடனான பாசப் போராட்டத்தை டிவியில் பார்த்தேன்.  கொஞ்சம் ஒத்துழையுங்கள். நீங்கள் சிறிது காலம் தனிமை வார்டில் தொடர்ந்து இருக்கவேண்டும். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கடவுளின் ஆசிர்வாதமும், உங்களின் கடின உழைப்பும் உங்களுக்கு நல்ல வெகுமதியை அளிக்கும். எனவே உங்கள் குடும்பத்துக்காக சிறிது காலம் தனிமை வார்டில் இருப்பதே நல்லது’ என்று கூறியதுடன், இதுதொடர்பாக அவருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.