'மேனேஜர், டீம் லீடர் கால் பண்ணாலும் கவலை இல்ல'... 'இது 'Working from Cycle'... மாஸ் காட்டிய இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றின் காரணமாக, பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்த படியே தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 'Work From Home' என்ற வார்த்தை அதிக அளவில் பேசு பொருளானது.
இந்நிலையில், இந்த 'Work From Home' என்ற ஒரு விஷயத்தை ஒரு படி மேலே எடுத்துச் சென்றுள்ளனர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள். பக்கன் ஜார்ஜ், ஆல்வின் ஜோசப் மற்றும் ரதிஷ் பலராவ் என்ற அந்த மூன்று பேர், கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் இருந்து கன்னியாகுமாரி என மொத்தம் 1687 கி.மீ தூரத்தை சைக்கிள் மூலம் பயணம் செய்து முடித்துள்ளனர்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இவர்கள் மூன்று பேரும் தங்களது அலுவலகத்தில் விடுப்பு எதுவும் எடுக்காமல், வழியிலுள்ள தாபா மற்றும் லாட்ஜ் ஆகியவற்றில் தங்கி தங்களது பணியையும் மேற்கொண்டு பயணத்தை நிறைவு செய்து அசத்தியுள்ளனர். வெறுமென வீட்டில் நான்கு சுவற்றுக்குள் இருந்து பணிபுரிவதை விரும்பாத இளைஞர்கள், அதனை 'Work from cycle' என்ற பெயரில் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்ற முடிவு செய்துள்ளனர்.
தினமும் காலையில் 4 மணிக்கு சைக்கிள் பயணத்தை ஆரம்பிக்கும் இவர்கள், சுமார் 11 மணி வரை தங்களது பயணத்தை மேற்கொள்வர். அதன்பிறகு, வழியில் ஏதேனும் தாபா அல்லது லாட்ஜ் ஒன்றில் ஒய்வு எடுத்துக் கொண்டே தங்களது பணிகளை ஆரம்பிப்பர். மொத்தமாக, இந்த பயணத்திற்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவான நிலையில், அதில் அதிகமாக லாட்ஜ் வாடகைக்கே ஆகியுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சில ஹோட்டல்கள் கொரோனா தொற்றின் காரணமாக, தங்க அனுமதிக்கவில்லை. மற்றபடி, அவர்கள் எந்தவித இடரையும் சந்திக்கவில்லை. வழக்கமான சுற்றுலா பயணிகளின் பயணம் போல, அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்கும் வகையில் இவர்களுக்கு இந்த பயணம் அமையாத நிலையில், தங்களின் பயணத்தின் போது வழியே சந்தித்துக் கொண்ட நபர்களும், சில அழகான இடங்களும் இதனை முற்றிலும் மறக்க முடியாத பயணமாக மாற்றியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது அலுவலக உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் என அனைவரும் அதிகம் ஆதரவு தெரிவித்ததால் தான் இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்