பெட்ரோல் விலை ஒரே நாளில் 25 ரூபாய் குறைப்பு.. ஆனால் ஒரு கண்டிசன்.. நிபந்தனை விதித்த மாநில அரசு
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து சென்றுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில அரசு பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் இந்த பெட்ரோல் குறைப்பு அமலுக்கு வரும் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் பெட்ரோல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளோம்.
அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு வரும் ஜனவரி 26, 2022-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் ஒப்புக்கொள்ள வேண்டும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் மாநில அரசுகளோ, தங்களுக்கு இருக்கும் ஒரு சில வரிகளில் பெட்ரோல் வரியும் ஒன்று என்பதால் கொண்டுவர மறுக்கின்றன. மத்திய அரசும் பெட்ரோல் மீது அதிக வரியை விதித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி கணிசமாக உயர்த்தப்பட்டது. செஸ் வரிகளும் பெட்ரோல் டீசல் மீது உள்ளது. மாநில அரசு மற்றும் மத்திய அரசு இரண்டு தரப்பும் வரிகளை விதிப்பதால் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும் பெரிய அளவில் குறைவது இல்லை. கடைசியாக தீபாவளிக்கு முன்பு பெட்ரோல் விலையை லிட்டருக்கு மத்திய அரசு 5ரூபாய் குறைத்தது. டீசல் விலையை 10 ரூபாய் குறைத்தது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தொடர்ந்து 55-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற செய்திகள்