‘1000, 2000 கிடைக்கும்னு நெனச்சோம், ஆனா...!’ திருடப்போன இடத்தில் பணத்தை பார்த்து திக்குமுக்காடிப்போன திருடர்கள்.. அதீத மகிழ்ச்சியால் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருடச்சென்ற இடத்தில் அளவுக்கு அதிகமான பணம் கிடைத்த மகிழ்ச்சியில் திருடருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தின் கோத்வாலி தேஹாத் என்ற பகுதியில் நவாப் ஹைதர் என்பவர் பொதுசேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இந்த சேவை மையத்தில் இருந்து சுமார் ரூ.7 லட்சம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், நுஷாத் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரும், அஜாஜ் என்ற மற்றொரு நபரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நுஷாத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ‘நாங்கள் இருவரும் பொதுசேவை மையத்தில் 1000, 2000 கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருடச் சென்றோம். ஆனால் எங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனோம். அப்போது அதிக பணத்தைப் பார்த்த சந்தோஷத்தில் அஜாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் கொள்ளையடித்த பணத்தில் பெரும்பகுதியை அறுவை சிகிச்சைக்கே செலவழித்துவிட்டோம். என்னிடமிருந்த மீதி பணத்தை கொண்டு டெல்லிக்குக் சென்று அங்கு சூதாட்டத்தில் பயன்படுத்தினேன்’ என போலீசார் விசாரணயில் நுஷாத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரிடமிருந்து ரூ.3.7 லட்சம் பணம் மற்றும் இரண்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீசார், ஏற்கெனவே இருவர் மீதும் பல திருட்டு வழக்குகள் இருந்ததையும் விசாரணையில் கண்டறிந்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு பைக்கையும் போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்த போலீசாருக்கு அம்மாநில காவல்துறை சார்பில் ரூ.5000 பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்